மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல், தற்போது மிக முக்கியமான மற்றும் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானுக்கு எதிரான போரின் “இறுதிக்கட்ட நடவடிக்கையை” (Final Blow) மேற்கொள்வது குறித்த ரகசியத் திட்டங்களை, அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதி பிராட்லி கூப்பர், அதிபர் டொனால்டு டிரம்பிற்கு நேரடியாக விளக்கியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக நீடித்து வரும் இந்த மோதலை, ஒரு முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மிகத்தீவிரமாகத் தயாராகி வருவதையே இந்தச் சந்திப்பு உறுதிப்படுத்துகிறது.
போர் களத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற ரீதியில், அமெரிக்கா தனது அனைத்து விருப்பங்களையும் (All Options Open) திறந்தே வைத்திருக்கிறது. ஈரானியப் படைகள் தங்களது ஏவுகணைத் தளங்களை அமெரிக்காவின் துல்லியத் தாக்குதல்களுக்கு எட்டாத தூரத்திற்கு நகர்த்திவிட்டதால், அமெரிக்கா இப்போது புதிய தொழில்நுட்ப ஆயுதங்களை நாடத் தொடங்கியுள்ளது. அதன்படி, ‘டார்க் ஈகிள்’ (Dark Eagle) என்று அழைக்கப்படும் அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அனுப்ப அமெரிக்கக் கடற்படை கோரிக்கை விடுத்துள்ளது.
இது நடைமுறைக்கு வந்தால், போர்க்களத்தில் இத்தகைய அதிநவீன தொழில்நுட்பத்தை அமெரிக்கா பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே சீனா மற்றும் ரஷ்யாவிடம் உள்ள இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் தொழில்நுட்பம், தற்போது அமெரிக்காவின் கைகளில் கிடைத்தால் அது ஈரானின் பாதுகாப்பு அமைப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்று ராணுவ வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
வான்வழித் தாக்குதல்களைத் தாண்டி, அமெரிக்கா தற்போது தரைப்படை நடவடிக்கைகளுக்கும் தயாராகி வருவதாகத் தகவல்கள் கசிகின்றன. குறிப்பாக, உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் நீரிணையின் சில பகுதிகளைத் தரைப்படை மூலம் கைப்பற்றி, வணிகக் கப்பல்களை மீண்டும் இயக்க வைக்கும் திட்டத்தில் அமெரிக்கா இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தத் திட்டம் வெற்றி பெற்றால், ஈரானின் பொருளாதார ரீதியான மிரட்டல்கள் முற்றிலுமாக முடக்கப்படும். இது போன்ற அதிரடி நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், ஈரானைத் தனிமைப்படுத்தி, அவர்களைப் பேச்சுவார்த்தைக்குப் பணிய வைக்க டிரம்ப் நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
ஈரான் தனது ஏவுகணைத் தளங்களை மறைத்து வைத்தாலும், அமெரிக்காவின் இந்த புதிய தொழில்நுட்பமும், தரைப்படை நடவடிக்கைகளும் ஈரானைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளும் என்பது உறுதி. ஈரான் தரப்பு தங்களது புதிய ஆயுதங்களைப் பற்றி மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கும் சூழலில், அமெரிக்கா தனது “ஃபைனல் ப்ளோ” திட்டத்துடன் களத்தில் இறங்கியிருப்பது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த போரின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும்? அமெரிக்காவின் இந்த ரகசியத் திட்டம் ஈரானை மண்டியிட வைக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
