சிலிண்டர் விலை எவ்வளவு? சிறு வணிகர்கள் தலையில் விழுந்த ‘இடி’!

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர்ச் சூழல், இந்திய மக்களின் சமையலறையைத் தாண்டி, தற்போது வணிக ரீதியான அடுப்புகளையும் கடுமையாகப் பாதித்திருக்கிறது. வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என்றாலும், வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டர் விலையில், ஒரே அடியில் 993 ரூபாய் அதிரடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, இது மூன்றாவது முறையாகக் கொண்டு வரப்பட்ட விலை உயர்வாகும். இந்த விலை உயர்வால் டெல்லியில் ஒரு வணிக சிலிண்டரின் விலை சுமார் 3,071 ரூபாயாகவும், மும்பையில் 3,024 ரூபாயாகவும் உயர்ந்திருக்கிறது.

இந்த மூன்று முறை தொடர் விலை உயர்வால், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சிறு வணிகங்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. வணிக ரீதியாகச் சமையல் எரிபொருளைப் பெருமளவில் நம்பியிருக்கும் இத்தகைய சிறு தொழில்களுக்கு, இது பெரும் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் உணவகங்கள் மற்றும் சிறு உணவுக் கடைகளில், உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு உணவக உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதன் தாக்கம் நேரடியாக நுகர்வோரான பொதுமக்களின் பாக்கெட்டைப் பாதிக்கவே அதிக வாய்ப்புள்ளது.

மறுபுறம், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது மக்களுக்குச் சற்று ஆறுதலைத் தந்தாலும், எண்ணெய் சந்தை நிறுவனங்கள் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன என்பதுதான் கசப்பான உண்மை. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 120 டாலரைத் தாண்டிவிட்டாலும், இந்தியாவில் சில்லறை விற்பனை விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றாமல் வைத்துள்ளன. இதனால் எண்ணெய் சந்தை நிறுவனங்கள் தினசரி சுமார் 16,000 கோடி ரூபாய்க்கும் மேல் நஷ்டத்தைச் சந்திப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்தைப் பொறுத்தவரை இது ஒரு இக்கட்டான சூழ்நிலை. விலையை உயர்த்தினால் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும்; உயர்த்தாவிட்டால் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் மூழ்கிவிடும். எனவே, ஓரளவிற்குத் தங்களின் லாபத்திலிருந்து இந்த இழப்பைச் சரிக்கட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் குறையாத வரை, இந்த நஷ்டத்தை நிறுவனங்களால் தொடர்ந்து தாங்கிக்கொள்ள முடியாது. எனவே, பெட்ரோல், டீசல் விலையில் இனிவரும் நாட்களில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா அல்லது அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏதாவது சலுகைகளை அறிவிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News