மத்திய அரசு ஊழியர்களுக்குப் ‘பேரிடி’! 8-வது ஊதியக் குழு எப்போது?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி. கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத கால அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரண (DR) நிலுவைத் தொகையை வழங்க முடியாது என்று மத்திய நிதியமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இந்த நிலுவைத் தொகையை எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், அரசு தற்போது கொடுத்துள்ள இந்த பதில், பலருக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. நிதியமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தின்படி, கொரோனா காலத்தில் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. அந்த இக்கட்டான சூழலில், சுகாதார மற்றும் மக்கள் நலத் திட்டங்களுக்காக அரசு பெருமளவு நிதியைச் செலவிட வேண்டியிருந்தது.

இதனால் அரசின் கருவூலத்திற்கு ஏற்பட்ட கடும் அழுத்தத்தைச் சமாளிக்கவே, ஜனவரி 2020, ஜூலை 2020 மற்றும் ஜனவரி 2021 ஆகிய காலக்கட்டங்களில் வழங்கப்பட வேண்டிய மூன்று தவணை DA/DR நிலுவைத் தொகையை அரசு முடக்கி வைத்தது. அந்த நிதிச் சூழல் இன்னும் முழுமையாகச் சீராகாத காரணத்தினால், இந்த நிலுவைத் தொகையை இப்போது வழங்க இயலாது என்று அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது. இதனால், பல ஆண்டுகளாகத் தங்கள் நிலுவைத் தொகை வரும் என்ற நம்பிக்கையில் இருந்த கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு, இது ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியுடன் சேர்ந்து, ஊழியர்கள் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் 8-வது ஊதியக் குழு (8th Pay Commission) குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. இதன்படி, 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் உடனடியாக அமலுக்கு வர வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. பொதுவாக முந்தைய ஊதியக் குழுக்களின் அனுபவத்தைப் பார்த்தால், பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அதனை நடைமுறைப்படுத்த அரசுக்கு 18 முதல் 24 மாதங்கள் வரை கால அவகாசம் தேவைப்படும்.

இதனால், 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2027-ஆம் ஆண்டின் நடுப்பகுதி அல்லது 2028-ஆம் ஆண்டின் தொடக்கத்திற்கு முன்பு அமல்படுத்தப்படுவது மிகவும் கடினம் என்றே கணிக்கப்படுகிறது. மொத்தத்தில், மத்திய அரசு ஊழியர்கள் தற்போதைக்கு நிலுவைத் தொகையோ அல்லது புதிய ஊதியக் குழுவின் சலுகையோ இன்றி, காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

Related News

Latest News