‘அதுக்கெல்லாம் பாகிஸ்தான் சரிப்பட்டு வராது’- கிழித்து தொங்கவிட்ட ‘ஈரான்’!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், பாகிஸ்தானின் மீடியேட்டர் தகுதி குறித்து ஈரான் தரப்பில் இருந்து மிகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஈரானின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இப்ராஹிம் ரெசாய், பாகிஸ்தானை ஒரு ‘நடுநிலையான மத்தியஸ்தராக’ ஏற்றுக்கொள்ள முடியாது என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஒரு நல்ல அண்டை நாடு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் காட்டும் அணுகுமுறை முற்றிலும் பாரபட்சமானது என்று அவர் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். ஈரானின் இந்த அதிருப்திக்கு மிக முக்கியமான சில காரணங்களை ரெசாய் பட்டியலிட்டுள்ளார். லெபனானில் போர் நிறுத்தம் செய்யப்படும் என்ற அமெரிக்காவின் வாக்குறுதி மீறப்பட்டபோது, பாகிஸ்தான் அதை ஏன் கண்டிக்கவில்லை என்பதுதான் ஈரானின் கேள்வி.

அமெரிக்கா ஈரானின் சொத்துக்களை விடுவிப்பதாகக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியபோதும், ஒரு மீடியேட்டராக பாகிஸ்தான் மௌனம் காத்தது, அந்த நாட்டின் மீதான நம்பகத்தன்மையை முற்றிலுமாகச் சிதைத்துவிட்டதாக ஈரான் கருதுகிறது. “பாகிஸ்தான் எப்போதும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நலன்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது, அமெரிக்காவின் விருப்பங்களுக்கு எதிராக ஒரு வார்த்தை கூடப் பேசத் தயங்குகிறது” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தன. பேச்சுவார்த்தைக்கு முன்னரே, அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறித் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் தொடர்ந்து கூறிவந்தது. அந்தச் சூழலில், பாகிஸ்தானின் இந்தச் செயல்பாடு ஈரானின் நம்பிக்கையைத் தகர்த்துள்ளது.

ஒரு மத்தியஸ்தராகச் செயல்படுபவர் நடுநிலையாக இருக்க வேண்டும், ஆனால் பாகிஸ்தான் ஒரு தரப்புக்கு ஆதரவாகச் செயல்படுவதால், அந்த நாடு இனி சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குச் சரிப்பட்டு வராது என்று ஈரான் முடிவெடுத்துள்ளது. இந்த விவகாரம், பாகிஸ்தான் – ஈரான் இடையிலான ராஜதந்திர உறவில் ஒரு புதிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது. சமாதானத்தை ஏற்படுத்த முயற்சி செய்த பாகிஸ்தான், தற்போது தனது நம்பகத்தன்மையை இழந்து நிற்கும் இந்தச் சூழல், மத்திய கிழக்கு அரசியலில் அடுத்தகட்டமாக எத்தகைய மாற்றங்களை உருவாக்கும் என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.

Related News

Latest News