8வது ஊதியக் குழுவின் இறுதி அறிக்கை.. சம்பளம் 3 மடங்கு உயருமா? ஊழியர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு மிக முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது. எட்டாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் தொடர்பான இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்க ஏப்ரல் 30-ஆம் தேதி கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா போன்ற மத்திய அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் PSNM அமைப்பு, ஒரு அதிரடியான கோரிக்கை மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

தற்போதைய ஏழாவது ஊதியக் குழுவில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல புரட்சிகரமான மாற்றங்களை இந்த அமைப்பு முன்வைத்துள்ளது. இதில் மிக முக்கியமாக, மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தைத் தற்போதுள்ள 18,000 ரூபாயிலிருந்து, 50,000 முதல் 60,000 ரூபாயாக, அதாவது மூன்று மடங்கு உயர்த்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

மேலும், சம்பளத்தை நிர்ணயிக்கும் ஃபிட்மென்ட் ஃபேக்டரை 2.57-லிருந்து 3.83 ஆக அதிகரிக்க வேண்டும் என்றும், ஆண்டுதோறும் வழங்கப்படும் ஊதிய உயர்வு எனப்படும் இன்கிரிமென்ட் விகிதத்தை 3 சதவீதத்திலிருந்து 6 முதல் 7 சதவீதமாக இரட்டிப்பாக்க வேண்டும் என்றும் வலுவாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

வீட்டு வாடகைப்படியைப் பொறுத்தவரை 12, 24 மற்றும் 36 சதவீதம் என உயர்த்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் டிஜிட்டல் தேவைகளுக்காக மாதம் 2,000 ரூபாய் தனிப்படியும், குழந்தைகளின் கல்வி உதவித்தொகையை மாதத்திற்கு 7,000 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60-லிருந்து 65 ஆக அதிகரிக்கவும், பணிக்கொடை எனப்படும் கிராஜுவிட்டி வரம்பை 25 லட்சத்திலிருந்து 50 லட்சம் ரூபாயாக உயர்த்தவும் இக்கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்களைப் பொறுத்தவரை, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது இவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. தற்போதைய சூழலில் பதவி உயர்வுகளில் நிலவும் காலதாமதத்தைத் தவிர்க்க, ஒவ்வொரு 6, 12, 18 மற்றும் 24 ஆண்டுகளில் கட்டாயப் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது

இதற்கிடையில், நிபுணர்களின் கருத்துப்படி அரசு 2.57 முதல் 2.86 வரையிலான ஃபிட்மென்ட் ஃபேக்டரையே அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர்களின் இந்த அதிரடி கோரிக்கைகளுக்கும், அரசின் இறுதி முடிவிற்கும் இடையே உள்ள இடைவெளி எந்த அளவிற்குச் சரிசெய்யப்படும் என்பதே இப்போது 50 லட்சத்திற்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Related News

Latest News