இந்தியப் பெருங்கடல் முதல் இலங்கை வரை! ஈரானியக் கப்பல்களை வேட்டையாடும் ‘அமெரிக்கா’!

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் உச்சக்கட்ட போர் பதற்றத்தின் ஒரு மர்மமான பக்கத்தை இப்போது உலகிற்குத் தோல் உரித்துக் காட்டியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கக் கடற்படை ஈரானைச் சுற்றி ஒரு பலமான இரும்புத் திரையை அமைத்து, அதன் எண்ணெய் ஏற்றுமதியை முழுமையாக முடக்கத் துடித்து வரும் வேளையில், ஈரானின் மிக முக்கியமான ‘கார்க்’ (Kharg) தீவில் ஆச்சரியமான சில நகர்வுகள் அரங்கேறி வருகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘சென்டினல் 1’ செயற்கைக்கோள் அனுப்பியுள்ள படங்களின்படி, அமெரிக்காவின் கடும் முற்றுகையையும் மீறி, சுமார் 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட பிரம்மாண்ட ‘சூப்பர் டேங்கர்’ கப்பல்கள் ஈரானியத் துறைமுகங்களில் எண்ணெய் நிரப்பிக் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரானின் இந்த அதிரடி வேகத்திற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய பொருளாதாரக் கணக்கு ஒளிந்துள்ளது.

அமெரிக்காவின் முற்றுகை இன்னும் தீவிரமடைந்தால், கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாமல் ஆயில் கிணறுகளை மூட வேண்டிய கட்டாயம் ஈரானுக்கு ஏற்படும். அத்தகைய சூழலைத் தவிர்க்கவே, ஈரான் தன்னிடம் இருக்கும் அனைத்துப் பிரம்மாண்டக் கப்பல்களிலும் அவசர அவசரமாக எண்ணெய்யை நிரப்பி வருகிறது. கடந்த வார நிலவரப்படி, கார்க் தீவிற்கு அருகே சுமார் 13 பிரம்மாண்ட எண்ணெய் கப்பல்கள் நங்கூரமிட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது முற்றுகை தொடங்குவதற்கு முன்பு இருந்த எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இதன் மூலம் ஈரானிய அரசு இன்னும் இரண்டு மாத காலத்திற்குத் தனது எண்ணெய் உற்பத்தியைத் தடையின்றித் தொடரத் தேவையான கால அவகாசத்தைத் தேடி வருகிறது. அமெரிக்காவோ தனது முற்றுகையை ஈரானியக் கடற்கரையோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. இந்தியப் பெருங்கடல் முதல் மலாக்கா ஜலசந்தி வரை அமெரிக்கப் போர்க்கப்பல்கள் விரிந்து பரந்து ஈரானியக் கப்பல்களை வேட்டையாடி வருகின்றன.

சமீபத்தில் இந்தியப் பெருங்கடலில் ‘மெஜஸ்டிக் எக்ஸ்’ என்ற கப்பலையும், இலங்கை அருகே ‘டிஃபானி’ என்ற கப்பலையும் அமெரிக்க மரைன் வீரர்கள் அதிரடியாகச் சிறைபிடித்தது, ட்ரம்ப் எவ்வளவு உறுதியாக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. இதுவரை சுமார் 36 ஈரானியக் கப்பல்களை அமெரிக்கக் கடற்படை நடுக்கடலில் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பியுள்ளது.

நடுக்கடலில் ஈரானியக் கப்பல்கள் தங்களின் இருப்பிடத்தைக் காட்டும் சிக்னல்களை அணைத்துவிட்டு ‘நிழல் கப்பல்கள்’ போலத் தப்பிக்க முயல்வதும், அமெரிக்கா அவர்களை நவீன ட்ரோன்கள் மூலம் தேடிக் கண்டுபிடிப்பதும் ஒரு நிஜமான போர்க்களக் காட்சியை கண்முன் நிறுத்துகின்றன.

ஈரானிடம் தற்போது சுமார் 9 கோடி பேரல் எண்ணெய் சேமிக்கும் வசதி இருந்தாலும், அமெரிக்காவின் இந்த உலகளாவிய முற்றுகை நீடித்தால் அந்த நாட்டின் வருமானம் மொத்தமாக முடங்கும் அபாயம் உள்ளது. ஜேபி மோர்கன் போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களின் கணிப்புப்படி, அமெரிக்காவின் இந்த “எகனாமிக் பியூரி” நடவடிக்கை ஈரானை ராணுவ ரீதியாக மட்டுமல்லாமல், நிதி ரீதியாகவும் நிலைகுலையச் செய்யும்.

ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் போர்நிறுத்த நீட்டிப்பு பற்றிப் பேசப்பட்டாலும், நடுக்கடலில் நடக்கும் இந்த எண்ணெய் போர் உலகளாவிய எரிபொருள் விலையில் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது மட்டும் உறுதி.

Related News

Latest News