அமெரிக்காவில் இந்தியர்களுக்கு ‘இடி’? H-1B விசாவுக்கு 3 ஆண்டுகள் ஆப்பு!

அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் அங்கு செல்லக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இடியாக ஒரு செய்தி வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளரும், குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான எலி கிரேன், “எச்-1பி விசா துஷ்பிரயோகத் தடுப்புச் சட்டம் 2026” என்ற அதிரடி மசோதாவைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எச்-1பி விசாக்கள் வழங்குவது முழுமையாக நிறுத்தப்படும். அமெரிக்கத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் என்று கூறப்பட்டாலும், இதன் நேரடித் தாக்கம் இந்திய ஐடி துறையின் முதுகெலும்பையே அசைத்துப் பார்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த புதிய சட்டத் திருத்தத்தின்படி, ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் 65,000 எச்-1பி விசாக்களின் எண்ணிக்கை வெறும் 25,000 ஆகக் குறைக்கப்படும். மேலும், தற்போது நடைமுறையில் உள்ள குலுக்கல் முறை (Lottery System) முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, அதிக சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.

குறிப்பாக, ஆண்டுக்கு குறைந்தது 2 லட்சம் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1.6 கோடி ரூபாய் சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்பட வேண்டும் என்ற மிகக் கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர வர்க்க இந்தியப் பொறியாளர்களின் அமெரிக்கக் கனவைத் தவிடு பொடியாக்கும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

இந்த மசோதாவில் உள்ள மற்றுமொரு அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், எச்-1பி விசா பெறுபவர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களையோ அல்லது சார்ந்திருப்பவர்களையோ (Dependents) அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மாணவர்கள் படிப்பு முடித்த பிறகு அங்கேயே தங்கிப் பணியாற்ற உதவும் ஓபிடி (OPT) திட்டத்தை ரத்து செய்யவும், விசா வைத்திருப்பவர்கள் நிரந்தரக் குடியுரிமை எனப்படும் ‘கிரீன் கார்டு’ பெற விண்ணப்பிப்பதைத் தடுக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. இனி விசா விண்ணப்பதாரர்களின் தகுதியை உறுதி செய்ய அவர்களின் லிங்க்டுஇன் (LinkedIn) போன்ற சமூக வலைதளப் பக்கங்கள் மற்றும் சுயவிவரக் குறிப்புகள் மிகத் தீவிரமாக ஆய்வு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் தங்களின் லாபத்திற்காக வெளிநாட்டு ஊழியர்களைக் குறைந்த சம்பளத்திற்குப் பயன்படுத்துவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்று எலி கிரேன் வாதிடுகிறார். ஏற்கனவே ஈரான் போரால் அமெரிக்கப் பொருளாதாரம் ஒருவித நெருக்கடியில் இருக்கும் வேளையில், இந்த விசா கட்டுப்பாடுகள் இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

ஒருபுறம் ட்ரம்ப் அரசு தனது “அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை” என்ற கொள்கையில் உறுதியாக இருந்தாலும், மறுபுறம் இது போன்ற முடிவுகள் சர்வதேச அளவில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்துமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

Related News

Latest News