கடந்த பிப்ரவரி இறுதியில் அமெரிக்கா ஈரானுக்கு எதிராகத் தொடங்கிய ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) போரின் விலை என்ன? அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடக்க, மறுபுறம் போர்க்களத்தில் அமெரிக்கா இழந்த ஆயுதங்கள் மற்றும் நிதி குறித்த புள்ளிவிவரங்கள் இப்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
38 நாட்கள் நடந்த இந்த மோதலில், அமெரிக்கா ஒரு நாளைக்குச் சராசரியாக 1 பில்லியன் டாலர், அதாவது சுமார் 8,400 கோடி ரூபாயைச் செலவு செய்துள்ளது. இது போர்க்களத்தில் மட்டும் நடந்த செலவு, இதன் நீண்டகாலப் பாதிப்புகள் இன்னும் அதிகம் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தத் தாக்குதலில் அமெரிக்கா பயன்படுத்திய ஆயுதங்களின் எண்ணிக்கை மலைக்க வைக்கிறது. சுமார் 1,100 ‘JASSM-ER’ ஸ்டெல்த் ஏவுகணைகள், 1,000-க்கும் மேற்பட்ட டோமாஹாக் (Tomahawk) ஏவுகணைகள் மற்றும் 1,200-க்கும் மேற்பட்ட பேட்ரியாட் (Patriot) இடைமறிப்பு ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அமெரிக்கா ஓராண்டில் உற்பத்தி செய்யும் மொத்த பேட்ரியாட் ஏவுகணைகளின் எண்ணிக்கையை விட, இந்த 38 நாட்களில் பயன்படுத்திய எண்ணிக்கை மிக அதிகம். இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு ஆயுதங்களைச் செலவழித்திருப்பது, அமெரிக்காவின் ராணுவக் கிடங்குகளில் ஒரு பெரும் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. இதை மீண்டும் சரிசெய்ய பல ஆண்டுகள் ஆகலாம் என்று பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த ஆயுதத் தட்டுப்பாடு ஏன் இவ்வளவு ஆபத்தானது?என்றால், அமெரிக்கா தனது பாதுகாப்பிற்காகவும், சீனாவுடனான மோதல் சாத்தியமுள்ள பசிபிக் பிராந்தியத்திற்காகவும் சேமித்து வைத்திருந்த ஆயுதங்களைத்தான் ஈரான் போருக்காகக் காலி செய்துள்ளது. தென்கொரியாவில் இருந்த ‘THAAD’ ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் இருந்த ராணுவத் தளவாடங்கள் அனைத்தும் மத்திய கிழக்குக்கு மாற்றப்பட்டன. இது, ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பாதுகாப்பை பலவீனப்படுத்தியுள்ளது.
இந்தச் செலவுகளை ஒரு சாதாரண மனிதர் புரிந்துகொள்ளும் வகையில் சொன்னால், அமெரிக்காவில் ஏழை எளிய மக்களுக்கான உணவுத் திட்டத்திற்கு (SNAP/Food stamps) ஒரு நாளைக்கு 300 மில்லியன் டாலர் மட்டுமே செலவிடப்படுகிறது. ஆனால், ஈரான் போருக்காக ஒரு நாளைக்கு 1 பில்லியன் டாலர் செலவாகிறது.
அதாவது, அமெரிக்காவின் ஏழை மக்களின் 3 நாள் உணவிற்கான செலவு, ஈரான் போரின் 1 மணிநேர செலவுக்குச் சமம். வெள்ளை மாளிகை, “எங்களிடம் ஆயுதங்கள் தாராளமாக உள்ளன” என்று மறுத்தாலும், காங்கிரஸ் மற்றும் பாதுகாப்புத் துறை வட்டாரங்களில், ஆயுதக் கிடங்குகள் ‘அபாயகரமான அளவுக்குக் குறைந்துவிட்டதாக’ தகவல்கள் கசிகின்றன.
வரலாற்று ரீதியாக, போர்க்காலத்தின் மொத்த செலவில் 40 சதவீதம் வீரர்களின் ஓய்வூதியம் மற்றும் மருத்துவச் செலவுக்கே செல்லும். அந்த வகையில், இந்த ஈரான் போர் அமெரிக்காவிற்கு 1 டிரில்லியன் டாலர் வரை பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தலாம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். இந்தத் தரவுகள் அனைத்தும், போர் என்பது வெறும் எல்லைப் பிரச்சினை மட்டுமல்ல, அது ஒரு நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பையே எப்படிச் சிதைக்கும் என்பதற்கு ஒரு பாடமாக உள்ளது.
