சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டு ‘ஆயில் ஷாக்’ உருவானால், அதன் தாக்கம் இந்தியாவில் மின்சாரக் கட்டண உயர்வாக வெளிப்படலாம். இதை ISI மார்க்கெட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக, புதைபடிவ எரிபொருட்களின் விலை மாற்றமும், மின்சாரக் கட்டணமும் இந்தியாவில் நெருங்கிய தொடர்புடையவை என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் மின்சார உற்பத்தி பெரும்பாலும் கச்சா எண்ணெய், நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களை சார்ந்தே உள்ளது. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தால், அதன் தாக்கம் வீடுகள் மட்டுமின்றி தொழிற்சாலைகளின் மின்சாரச் செலவிலும் நேரடியாக பிரதிபலிக்கும். குறிப்பாக, தொழில் துறைகள் அதிக சுமையைச் சந்திக்க நேரிடும் என அறிக்கை எச்சரிக்கிறது.
எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டால், பல நாடுகள் மாற்று எரிபொருளாக நிலக்கரியை அதிகம் பயன்படுத்த தொடங்கும். இதனால் நிலக்கரியின் விலையும் உயரும். இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் சுமார் 70 சதவீதம் நிலக்கரியை அடிப்படையாகக் கொண்டுள்ளதால், அதன் விலை உயர்வு மின்சாரக் கட்டணத்தை மேலும் பாதிக்கக் கூடும்.
இதே நேரத்தில், நீண்டகால எரிசக்தி பாதுகாப்பிற்காக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முக்கிய தீர்வாக உருவெடுத்து வருகிறது. 2017 முதல் இந்தியாவில் புதிதாக அமைக்கப்பட்ட மின் நிலையங்களில் சூரிய மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களுக்கு அதிக பங்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆற்றலை முழுமையாக மின்சார உற்பத்தியாக மாற்றுவதில் இன்னும் சவால்கள் உள்ளன. புதைபடிவ எரிபொருட்களின் சார்பை குறைத்து, மின்சாரக் கட்டணத்தை நிலையாக வைத்திருக்க புதுப்பிக்கத்தக்க ஆற்றல் விரிவாக்கம் அவசியம் என அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
