இந்தியாவை கடுமையாக விமர்சித்த ‘அமெரிக்கா’! உள்ளே வந்து சம்பவம் செய்த ‘ஈரான்’!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சமூக வலைதளத்தில் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளை மிக மோசமான வார்த்தைகளால் விமர்சித்து ஒரு பதிவைப் பகிர்ந்தது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அமெரிக்காவின் குடியுரிமைச் சட்டங்கள் குறித்துப் பேசுகையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளை ‘ஹெல்ஹோல்’ (Hellhole) என்று அவர் குறிப்பிட்டது, இந்தியா தரப்பில் பெரும் எதிர்ப்புகளைச் சம்பாதித்தது.

இதற்கிடையில், இந்த விவகாரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக, மும்பையில் உள்ள ஈரானியத் தூதரகம் களத்தில் இறங்கி, ட்ரம்பிற்கு ஒரு அதிரடிப் பதிலடியைக் கொடுத்துள்ளது. மும்பையில் உள்ள ஈரான் தூதரகம், எக்ஸ் (X) தளத்தில் மகாராஷ்டிராவின் கலாச்சாரம் மற்றும் அழகைப் பறைசாற்றும் ஒரு வீடியோவைப் பகிர்ந்து, ட்ரம்பை நோக்கி மிகக் காட்டமான ஒரு கேள்வியை முன்வைத்துள்ளது.

“திரு. ட்ரம்ப், உங்களுக்கு ஒரு ‘கலாச்சார டிடாக்ஸ்’ (Cultural Detox) தேவை, அப்போதுதான் தேவையற்ற பேச்சுக்கள் குறையும்” என்று கூறியுள்ள ஈரான் தூதரகம், “கபி இந்தியா ஆ கே தேகோ, பிர் போல்னா” அதாவது, “ஒருமுறை இந்தியா வந்து பார்த்துவிட்டு, அதன் பிறகு பேசுங்கள்” என்று ஹிந்தியில் பதிலடி கொடுத்துள்ளது. இது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, இந்தியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த விவகாரத்தில் இந்திய வெளியுறவுத் துறை ஏற்கனவே தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தது. ட்ரம்பின் அந்த வார்த்தைகள் தகவல் அறிவற்றவை, பொருத்தமற்றவை மற்றும் நாகரிகமற்றவை என்று இந்தியா மிகத் தெளிவாகத் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தது.

நிலைமை கைமீறிச் செல்வதை உணர்ந்த அமெரிக்கத் தூதரகம், உடனடியாகச் சமாதான நடவடிக்கையில் இறங்கியது. ட்ரம்ப் இந்தியா மீது மிகுந்த மரியாதை கொண்டவர் என்றும், பிரதமர் மோடியை அவர் தனது நெருங்கிய நண்பராகக் கருதுகிறார் என்றும் அமெரிக்கத் தரப்பு விளக்கம் அளித்தது. சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும், ஈரான் தூதரகத்தின் இந்த ‘டிடாக்ஸ்’ கிண்டல், தற்போதைய அரசியல் சூழலில் ஒரு சுவாரஸ்யமான ராஜதந்திர நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

Related News

Latest News