அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒருவேளை அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், ஈரானிடம் இருக்கும் அணுசக்திப் பொருட்களை அந்த நாட்டை விட்டு வெளியேற்றுவது என்பது உலக வரலாற்றிலேயே மிக ஆபத்தான மற்றும் சிக்கலான ஒரு ராணுவ நடவடிக்கையாக இருக்கப்போகிறது என்று அணுசக்தி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் யுரேனியத்தை அப்படியே அள்ளி வந்துவிடலாம் என்று கணக்குப்போட்டாலும், களத்தில் இருக்கும் சவால்கள் ஒரு ஹாலிவுட் ஆக்ஷன் படத்தையே மிஞ்சும் வகையில் உள்ளன.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்து ஒப்பந்தம் போடுவதை விட, அந்த யுரேனியத்தைத் தொடுவதுதான் இப்போது மிகப்பெரிய இமாலயச் சவாலாக உருவெடுத்துள்ளது. இதற்கு மிக முக்கியமான காரணம், ஈரானின் அணுசக்தி நிலையங்களான நடான்ஸ் (Natanz) மற்றும் இஸ்பஹான் (Isfahan) ஆகிய இடங்கள் மீது ஏற்கனவே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் தான். இந்தத் தாக்குதல்களால் நிலத்தடியில் உள்ள அணுசக்தி மையங்களின் சுரங்கப் பாதைகள் இடிந்து விழுந்துள்ளன.
கதிர்வீச்சு அபாயம் கொண்ட அந்த யுரேனியம் சேமிப்புக் கிடங்குகளை இப்போது ஒரு மனிதன் கூட நெருங்க முடியாத அளவுக்குச் சிதைவுகள் ஏற்பட்டுள்ளன. மண்ணுக்கு அடியில் புதையுண்டு கிடக்கும் அந்த “அணுத் துகள்களை” மீட்டெடுப்பது என்பது ஒரு சாதாரண வேலை அல்ல; அதற்கு நவீன ரோபோக்கள் மற்றும் ரிமோட் மூலம் இயங்கும் கருவிகள் தேவைப்படும். அதுமட்டுமின்றி, இந்த யுரேனியம் என்பது ஒரு சாதாரணப் பொருள் அல்ல; இது சிலிண்டர்களில் அதிக அழுத்தத்துடன் கூடிய வாயு வடிவில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. தாக்குதல்களால் அந்தச் சிலிண்டர்கள் ஏதேனும் சேதமடைந்திருந்தால், அவற்றை அப்புறப்படுத்தும் போது ஏற்படும் கதிர்வீச்சு கசிவு ஒரு மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தும்.
இந்த அதீத ஆபத்தான பொருட்களை ஒரு போர்க்களத்தில் இருந்து எப்படி லாரிகளிலோ அல்லது விமானங்களிலோ ஏற்றிச் செல்வது என்பது ராணுவத் தளபதிகளுக்கே தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை ஈரான் சம்மதித்தாலும், அந்த யுரேனியத்தை அமெரிக்காவிற்குள் கொண்டு வர ட்ரம்ப் அனுமதிக்கப் போவதில்லை. அதை ரஷ்யாவுக்கோ அல்லது கஜகஸ்தானுக்கோ கொண்டு சென்று அழிக்க வேண்டும் என்ற திட்டங்கள் விவாதிக்கப்படுகின்றன. கடைசியாக இருக்கும் மிகப்பெரிய சந்தேகம் “உண்மைத் தன்மை”.
ஈரான் தன்னிடம் உள்ள அனைத்து யுரேனியத்தையும் கொடுத்துவிட்டதா அல்லது ரகசியமாக எங்காவது ஒளித்து வைத்துள்ளதா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? சர்வதேச ஆய்வாளர்கள் ஈரானின் மூலை முடுக்கெல்லாம் சோதனை நடத்த வேண்டியிருக்கும். “யுரேனியம் முழுமையாக வெளியேற்றப்பட்டுவிட்டது” என்று அமெரிக்கா அறிவிக்கும் வரை இந்தப் போர் பதற்றம் ஓயாது. ஒப்பந்தம் என்பது வெறும் தொடக்கம் தான், ஆனால் இந்த அணுசக்தி ஆபரேஷன் என்பது மரணத்தின் விளிம்பில் நின்று செய்ய வேண்டிய ஒரு வேலை. ஆக என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்க்
