அமெரிக்காவிடம் சிக்கிய ‘ஈரான்’ கப்பல்… உள்ளே இருந்தது என்ன?

உலக அரசியலில் ஒரு மிகப்பெரிய அணுகுண்டு போன்ற செய்தியை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க அரசியல் தலைவர் நிக்கி ஹேலி இப்போது உடைத்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கக் கடற்படையால் அதிரடியாகச் சிறைபிடிக்கப்பட்ட ஈரானின் ‘டௌஸ்கா’ (Touska) என்ற சரக்குக் கப்பலில், ஏவுகணைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரகசிய ரசாயனங்கள் இருந்ததாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். சீனாவிலிருந்து ஈரானை நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தக் கப்பல், அமெரிக்காவின் கடல்வழி முற்றுகையை மீற முயன்றபோது சபஹார் துறைமுகம் அருகே மடக்கிப் பிடிக்கப்பட்டது. சீனா ஈரானுக்குப் பின்னால் இருந்து உதவி செய்கிறது என்ற உண்மையை இனி யாராலும் மறைக்க முடியாது என்று நிக்கி ஹேலி விடுத்துள்ள எச்சரிக்கை சர்வதேச அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

இந்தச் சிறைபிடிப்பு நடவடிக்கையை அமெரிக்காவின் ஆயுதமேந்திய கொள்ளைச் செயல் என்று ஈரானிய ராணுவம் மிகக் கடுமையாகச் சாடியுள்ளது. சீனாவிலிருந்து வரும் சாதாரணப் பொருட்களைக் கொண்டு வந்த கப்பலை அமெரிக்கா அத்துமீறிப் பிடித்துள்ளதாக ஈரான் கூறுகிறது. ஆனால், அமெரிக்காவின் சென்ட்காம் (CENTCOM) மற்றும் உளவுத்துறை அறிக்கைகளோ முற்றிலும் வேறொரு கதையைச் சொல்கின்றன. இந்தக் கப்பலில் ராணுவ ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் பயன்படுத்தக்கூடிய டூயல்-யூஸ் (Dual-use) ரக உலோகங்கள், எலெக்ட்ரானிக் கருவிகள் மற்றும் ஏவுகணைத் தயாரிப்பிற்குத் தேவையான உலோகக் குழாய்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஈரானின் ஏவுகணைத் திட்டங்களுக்கு உதவும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில், இந்தப் பிடிபட்ட கப்பல் ஈரானுக்கு விழுந்த மிகப்பெரிய அடியாகப் பார்க்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த இரண்டாவது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையைப் புறக்கணிப்பதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. எங்கள் மீதான கடல்வழி முற்றுகையை அமெரிக்கா நீக்கும் வரை, நாங்கள் எவ்விதப் பேச்சுவார்த்தையிலும் கலந்து கொள்ள மாட்டோம் என்று ஈரான் பிடிவாதமாக உள்ளது. நடுக்கடலில் நடந்த இந்தத் துரத்தல் மற்றும் சிறைபிடிப்பு நடவடிக்கையின் போது, கப்பலில் இருந்த மாலுமிகளின் குடும்பத்தினர் அங்கே இருந்ததால் மட்டுமே தாங்கள் அமெரிக்கப் படைகளைத் தாக்கவில்லை என்றும், இல்லையென்றால் நடுக்கடலில் ஒரு பெரும் போர் வெடித்திருக்கும் என்றும் ஈரானிய ராணுவம் மிரட்டல் விடுத்துள்ளது.

சீனாவின் மறைமுக உதவிகளும், அமெரிக்காவின் ஆக்ரோஷமான முற்றுகையும் மத்திய கிழக்கை மீண்டும் ஒரு மிகப்பெரிய போரின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. ஒருபுறம் அதிபர் ட்ரம்ப் அமைதி பற்றிப் பேசினாலும், மறுபுறம் ஈரானின் ராணுவ விநியோகச் சங்கிலியை நடுக்கடலிலேயே அறுத்தெறிய அமெரிக்கா தயாராக இருப்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது. சீனாவிற்கும் ஈரானுக்கும் இடையே இருக்கும் இந்த ரகசியப் போக்குவரத்து மற்றும் நிக்கி ஹேலி எழுப்பியுள்ள இந்த ஏவுகணை ரசாயனப் புகார், வரும் நாட்களில் உலக அரசியலில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News