உலகமே அடுத்த 50 ஆண்டுகளுக்கான வளர்ச்சித் திட்டங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், நோபல் பரிசு பெற்ற ஒரு விஞ்ஞானி விடுத்துள்ள எச்சரிக்கை ஒட்டுமொத்த மனித இனத்தையும் உலுக்கி எடுத்துள்ளது. இயற்பியலில் நோபல் பரிசு வென்ற டேவிட் கிராஸ் (David Gross), தற்போது நிலவி வரும் சர்வதேச அரசியல் சூழல்களைக் கவனித்து ஒரு பகீர் கணிப்பை வெளியிட்டுள்ளார். அவர் சொல்வது என்னவென்றால், மனித இனம் இந்த பூமியில் வாழ்வதற்கு இன்னும் வெறும் 35 ஆண்டுகள் மட்டுமே மிச்சம் இருக்கலாம் என்பதுதான்.
இது ஏதோ ஒரு கற்பனைக்கதை அல்ல, தற்போதைய போர்கள் மற்றும் அணு ஆயுதப் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு அவர் முன்வைத்துள்ள ஒரு அறிவியல் ரீதியான கணிப்பு. இயற்பியலின் அடிப்படை விதிகளைத் துல்லியமாகக் கணக்கிட்ட டேவிட் கிராஸ், இப்போது மனித இனத்தின் அழிவுக்கான வாய்ப்புகளைக் கணக்கிடத் தொடங்கியுள்ளார். அவரது கணக்குப்படி, ஒவ்வொரு ஆண்டும் ஒரு அணு ஆயுதப் போர் உருவாவதற்கான வாய்ப்பு 2 சதவீதமாக உள்ளது.
அதாவது, 50-ல் ஒரு பங்கு வாய்ப்பு ஒவ்வொரு ஆண்டும் நமக்காகக் காத்திருக்கிறது. இந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், அடுத்த 35 ஆண்டுகளுக்குள் உலகம் ஒரு மிகப்பெரிய அணு ஆயுதப் பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்பது அவரது வாதம். பனிப்போர் காலத்தை விட இப்போது நிலைமை மிக மோசமாக உள்ளதாகவும், செய்தித்தாள்களைத் திறந்தாலே போரும் அழிவும் தான் கண்முன் நிற்பதாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிடுகிறார்.
இப்போதைய சூழலில் ஐரோப்பாவின் நடுப்பகுதியில் ஒரு மாபெரும் போர் நடந்து கொண்டிருக்கிறது, ஈரானின் மீது குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கிறது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் அணு ஆயுதப் போரின் விளிம்பிற்குச் சென்று திரும்புகின்றன. ஒரு காலத்தில் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்த நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் இருந்தன, ஆனால் இன்று அவை அனைத்தும் காணாமல் போய்விட்டன.
முன்பெல்லாம் இரண்டு வல்லரசுகள் மட்டுமே அணு ஆயுதங்களை வைத்திருந்தன, ஆனால் இன்று 9 நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் மிரட்டி வருகின்றன. அதைவிடக் கொடுமையாக, மிக விரைவில் இந்த அழிவு ஆயுதங்களை மனிதர்களுக்குப் பதில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ (AI) கட்டுப்படுத்தப் போகிறது என்பதுதான் மிகப்பெரிய அச்சுறுத்தல்.
விஞ்ஞானி டேவிட் கிராஸ் இந்த எச்சரிக்கையை விடுப்பதன் நோக்கம் நம்மைப் பயமுறுத்துவது மட்டுமல்ல, உலக நாடுகளைச் சிந்திக்க வைப்பதற்கே. நாடுகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள வேண்டும் என்றும், ராஜதந்திர ரீதியாகத் தீர்வுகளைத் தேட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
அணு ஆயுதப் போர் என்பது யாரோ ஒருவரை மட்டும் அழிப்பது அல்ல, அது ஒட்டுமொத்த மனித குலத்தையும் அழித்துவிடும் ஒரு தற்கொலை முயற்சி என்பதை நாம் உணர வேண்டும். விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அதே இயற்பியல் விதிகள் இன்று மனித இனத்திற்கு எமனாக மாறாமல் இருக்க வேண்டுமானால், நாடுகள் அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.
