ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டதால் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகி, அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் உலக மக்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.
இந்த போர் எப்போது முடியும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், இரு தரப்பினரின் பிடிவாத நிலைப்பாடு காரணமாக முடிவு எட்டப்படவில்லை. ஒரு நாள் சமாதான பேச்சுகள் நடப்பதுபோல் தோன்றினாலும், மறுநாள் அதற்கு மாறான நிலை உருவாகிறது. இந்த சூழலில், பிரபல முதலீட்டு நிபுணர் ரே டாலியோ{Ray Dalio}முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவரின் கருத்துப்படி, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய இந்த மோதல்கள், உலகப் போரின் ஆரம்ப கட்டத்தை பிரதிபலிக்கின்றன. உலக ஒழுங்கு (World Order) சிதைந்து, அமெரிக்காவின் ஆதிக்கம் குறைந்து வருவதாக அவர் கூறுகிறார். “வல்லவனே வெல்வான்” என்ற நிலைக்கு உலகம் நகர்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மேலும், ரஷ்யா – உக்ரைன் போர் உள்ளிட்ட பல பிராந்திய மோதல்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்றும், இது ஒரு பெரிய உலகப் போருக்கான அறிகுறிகள் என்றும் அவர் விளக்குகிறார். சீனா மற்றும் ரஷ்யா தலைமையிலான புதிய கூட்டணிகள் உருவாகி, அமெரிக்கா தலைமையிலான அமைப்புக்கு சவால் விடுக்கின்றன.
உலக நாடுகளின் கடன் அதிகரிப்பு, ராணுவ செலவுகள் உயர்வு, பொருளாதார தடைகள் மற்றும் விநியோக சங்கிலி சிக்கல்கள் போன்றவை அனைத்தும் உலகப் போர் முன் காணப்பட்ட அறிகுறிகளே என அவர் குறிப்பிட்டார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய போர் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
