வெளுத்து வாங்கும் வெயில்; அடுத்து மழை எப்போது? வானிலை அப்டேட்…

தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. சமீபத்தில் வேலூர், மதுரை, ஈரோடு, கரூர், சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை கடந்தது. குறிப்பாக ஈரோடு, கரூர், சேலம் பகுதிகளில் 104 டிகிரி வரை வெயில் பதிவாகியுள்ளது. அதிக வெப்பத்துடன் சேர்ந்து காற்றில் ஈரப்பதமும் உயர்ந்ததால் மக்கள் புழுக்கத்தால் அவதிப்படுகின்றனர்.

வானிலை மையத்தின் தகவலின்படி, மரத்வாடா முதல் மன்னார் வளைகுடா வரை கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக சுமார் 0.9 கிமீ உயரத்தில் காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதனால் ஏப்ரல் 21 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா பகுதிகள், இராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை தொடரும்.

ஏப்ரல் 22 மற்றும் 23 தேதிகளிலும் இதேபோன்ற நிலை நீடித்து, சில இடங்களில் மட்டும் மழை பெய்யக்கூடும். உள் தமிழக மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் வெப்பம் இயல்பாக இருந்தாலும், அதிக ஈரப்பதம் காரணமாக அசௌகரியம் ஏற்படும்.

சென்னை பகுதியில் இன்று மேகமூட்டத்துடன் வானிலை காணப்பட்டு, அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி மற்றும் குறைந்தபட்சம் 28 டிகிரி இருக்கும்.

மேலும், வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் கூறுகையில், ஏப்ரல் 28 வரை வெப்பம் நீடிக்கும். அதன் பின்னர் இடியுடன் கூடிய கோடை மழை தொடங்கி, மே மாத முதல் வாரத்தில் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News