ரூ.10000 அபராதம்! வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!

இந்தியாவில் வாகன விதிமுறைகள் நாளுக்கு நாள் கடுமையாக்கப்பட்டு வரும் நிலையில், வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய செய்யும் வகையிலான ஒரு புதிய அபராத விதிமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது.உங்கள் வாகனத்தில் அதிக பாதுகாப்பு கொண்ட பதிவு எண் பலகை HSRP இல்லை என்றால், இனி உங்களால் வாகன புகை பரிசோதனை சான்றிதழை பெற முடியாது. அதுமட்டுமில்லாமல், உங்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று போக்குவரத்து துறை தரப்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.HSRP என்பது வாகனங்களுக்காக அரசால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகை ஆகும்.

ஏப்ரல் 1, 2019-க்கு பிறகு வாங்கப்பட்ட அனைத்து புதிய வாகனங்களுக்கும் விற்பனையின்போதே இந்த HSRP நம்பர் பிளேட் பொருத்தப்பட்டுவிடுகிறது. ஆனால், ஏப்ரல் 1, 2019-க்கு முன்பு வாங்கப்பட்ட பழைய வாகனங்களுக்கும் இந்த நம்பர் பிளேட்டை பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை பலமுறை எச்சரிக்கை விடுத்தும், இன்னும் 70 சதவீத பழைய வாகன உரிமையாளர்கள் இதை பொருத்துவதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தான் புதிய கெடுபிடி அமலுக்கு வந்துள்ளது.

உங்கள் வாகனத்தில் HSRP நம்பர் பிளேட் இல்லை என்றால் முதல் முறை ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். இந்த தவற்றை மீண்டும் செய்தால் அபராத தொகை ரூ.10,000 ஆக உயரும். இது ஒருபுறமிருக்க, HSRP நம்பர் பிளேட் இல்லாததால் உங்களால் புகை பரிசோதனை சான்றிதழை புதுப்பிக்க முடியாது. PUC சான்றிதழ் இல்லாமல் வாகனத்தை இயக்கினால், அதற்கும் தனியாக ரூ.10,000 வரை அபராதம் செலுத்த நேரிடும்.கேமராக்கள் பொருத்தப்பட்ட சாலைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் தானியங்கி முறையில் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை ஸ்கேன் செய்து இந்த அபராதங்கள் ஆன்லைன் மூலம் நேரடியாக வாகன உரிமையாளருக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது இது உத்திரபிரதேசத்தில் நடைமுறையில் உள்ளது.

மேலும் HSRP நம்பர் பிளேட்டை பொருத்தாவிட்டால் அபராதம் மட்டுமின்றி பல்வேறு நெருக்கடிகளையும் நீங்கள் சந்திக்க நேரிடும். வாகனத்தின் RC புதுப்பித்தல் போன்ற சேவைகளை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெற முடியாது. வாகனத்தை வேறொருவர் பெயருக்கு உரிமை மாற்றம் செய்ய முடியாது. வாகனத்திற்கான இன்சூரன்ஸை புதுப்பிப்பதில் சிக்கல்கள் ஏற்படும் என இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் எச்சரித்துள்ளது.

இந்த நம்பர் பிளேட்டைப் பெறுவது மிகவும் எளிதான ஒன்றுதான் .அதற்கு வாகன உரிமையாளர்கள் தங்களின் இன்ஜின் எண் மற்றும் சேஸிஸ் எண் ஆகிய விவரங்களை கொடுத்து, ஆன்லைன் மூலமாகவே இதற்கு விண்ணப்பிக்கலாம். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.200 முதல் ரூ.500 வரையிலும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.600 முதல் ரூ.1,500 வரையிலும் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எரிபொருள் வகையை குறிக்கும் ஸ்டிக்கருக்கு கூடுதலாக சுமார் ரூ.100 செலுத்த வேண்டியிருக்கும். எனவே, ரூ.10,000 அபராதத்திலிருந்து தப்பிக்கவும், தேவையற்ற அலைச்சல்களை தவிர்க்கவும் வாகன உரிமையாளர்கள் உடனடியாக தங்கள் வாகனங்களில் இந்த HSRP நம்பர் பிளேட்டை பொருத்திக்கொள்வது அவசியமாகும்.

Related News

Latest News