உலக அரசியலில் நீண்ட கால “பெஸ்ட் பிரண்ட்ஸ்” ஆக இருக்கும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிற்கு இடையே இப்போது ஒரு சுவாரசியமான இராஜதந்திர மோதல் வெடித்துள்ளது. வடகொரியாவின் அணு ஆயுத ரகசியங்களைக் கையாளுவதில் தென் கொரியா செய்த ஒரு சின்ன குளறுபடி, இப்போது வாஷிங்டன் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியாவின் இதுவரை உறுதிப்படுத்தப்படாத ரகசிய அணு ஆயுத தளமான ‘குசோங்’ (Kusong) என்ற பெயரை தென் கொரிய அமைச்சர் பொதுவெளியில் போட்டு உடைத்ததுதான் இந்த ரகளையின் ஆரம்பப் புள்ளி. “வாய் தவறி வந்த ரகசியம்” போல அமைச்சர் சொன்ன அந்த ஒரு வார்த்தை, இப்போது அமெரிக்காவை ஆத்திரத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது.
விஷயம் என்னவென்றால், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய தென் கொரிய அமைச்சர் சுங் டோங்-யங், வடகொரியாவின் பிரபலமான அணு தளங்களைத் தாண்டி, ‘குசோங்’ என்ற இடத்திலும் யுரேனியம் ஆலை இருப்பதாகத் தெரிவித்தார். பொதுவாக இது போன்ற தகவல்கள் “டாப் சீக்ரெட்” (Top Secret) எனப்படும் உளவுத்துறை ரகசியங்களாகும்.
அமெரிக்காவின் முன் அனுமதி இன்றி இத்தகைய அதீத ரகசியங்களை அம்பலப்படுத்தியது, வெள்ளை மாளிகையை “டென்ஷன்” ஆக்கியுள்ளது. இதன் எதிரொலியாக, தென் கொரியாவிற்கு வழங்கப்படும் ரகசிய உளவுத் தகவல்களை அமெரிக்கா இனி பகுதியளவு கட்டுப்படுத்தப் போவதாகச் செய்திகள் கசிந்துள்ளன. அதாவது, “நீ ரகசியத்தைக் காக்கத் தெரியாத ஆள், உனக்கு இனிமேல் முக்கியத் தகவல்களைத் தரமாட்டோம்” என்று அமெரிக்கா மறைமுகமாக சிக்னல் கொடுத்துள்ளது.
ஆனாலும் தென் கொரியா அசால்ட்டாக ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளது. “நாங்கள் எந்த ரகசியத்தையும் சொல்லவில்லைப்பா, எல்லாம் பொதுவெளியில் இருக்கும் ரிப்போர்ட்டைப் பார்த்துதான் சொன்னோம்” என்று அவர்கள் மழுப்பியுள்ளனர். மேலும், சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் கிராஸி சொன்னதை வைத்துதான் அமைச்சர் பேசினார் என்றும் தென் கொரியா முட்டுக்கொடுத்துள்ளது. ஆனால் இங்கேதான் ஒரு பெரிய ட்விஸ்ட் காத்திருக்கிறது.
அந்தச் சர்வதேச அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிக்கையை எடுத்துப் பார்த்தால், அதில் ‘குசோங்’ என்ற இடத்தைப் பற்றிய மூச்சுக் கூட விடப்படவில்லை. இது தென் கொரியாவின் மழுப்பலான விளக்கத்தை உலக அரங்கில் சிரிப்பாய் சிரிக்க வைத்துள்ளது. இந்த இராஜதந்திர விரிசல், கொரிய தீபகற்பத்தில் வடகொரியாவின் அணு அச்சுறுத்தலைத் தடுப்பதில் பின்னடைவை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.
ஒருபுறம் அமெரிக்கத் தூதரகம் இது குறித்து அதிகாரப்பூர்வமாகப் பேசாமல் மௌனம் காத்தாலும், மறுபுறம் உளவுத்துறை உறவில் விழுந்துள்ள இந்த விரிசல் அப்பட்டமாகத் தெரிகிறது. கிம் ஜாங் உன்னின் ரகசிய அணு தளங்கள் ஒருபுறம் அம்பலமானாலும், நட்பு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் மோதல் யாருக்குச் சாதகமாக முடியும் என்பதை அடுத்த சில நாட்கள் தீர்மானிக்கும்.
