‘பசியில் வாடும் அமெரிக்க வீரர்கள்’! நடுக்கடலில் முடங்கிய USS ஆபிரகாம் லிங்கன்!

உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவம் என்று மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்காவிற்கு, தற்போது போர்க்களத்திற்கு வெளியே ஒரு மிகப்பெரிய சவால் உருவாகியுள்ளது. மத்திய கிழக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்காவின் பிரம்மாண்டப் போர்க்கப்பல்களான யுஎஸ்எஸ் திரிப்போலி (USS Tripoli) மற்றும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) ஆகியவற்றில் பணியாற்றும் வீரர்கள், கடுமையான உணவுத் தட்டுப்பாட்டினால் பசியில் வாடி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

“நாங்கள் எப்போதும் பசியோடு இருக்கிறோம்” என்று போர்க்கப்பலில் இருக்கும் வீரர்கள் தங்களின் குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ள உருக்கமான செய்திகள், அமெரிக்க ராணுவத்தின் தற்போதைய நிலையை உலகிற்குத் தோல் உரித்துக் காட்டியுள்ளன. இந்தக் கப்பல்களில் வழங்கப்பட வேண்டிய உணவின் தரம் மற்றும் அளவு மிக மோசமாகத் குறைந்துள்ளதைச் சுட்டிக்காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஒரு மதிய உணவுத் தட்டில் வெறும் ஒரு சிறிய துண்டு இறைச்சியும், சில வேகவைத்த கேரட்களும் மட்டுமே காணப்படுகின்றன.

புதிய காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் முழுமையாக நின்றுவிட்டதால், வீரர்கள் தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப உணவைப் பகிர்ந்து உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். “உலகின் வலிமையான ராணுவத்தை வைத்துள்ள ஒரு நாடு, தனது வீரர்களுக்குச் சாப்பாடு கூட வழங்க முடியாமல் இருப்பது மிகப்பெரிய அவமானம்” என்று பாதிக்கப்பட்ட வீரர்களின் குடும்பத்தினர் ஆவேசமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணமாக, மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள போக்குவரத்துச் சிக்கல்கள் கூறப்படுகின்றன. வான்வெளி மூடப்பட்டுள்ளதாலும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களாலும் சுமார் 27 ராணுவ அஞ்சல் மண்டலங்களுக்கான சேவையை அமெரிக்கத் தபால் துறை (USPS) தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இதனால், வீரர்களின் குடும்பத்தினர் தங்களின் அன்புக்குரியவர்களுக்கு அனுப்பும் பிஸ்கட், நொறுக்குத் தீனிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கூடக் கப்பல்களுக்குச் சென்று சேரவில்லை. அஞ்சல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான பொதிகள் தேங்கிக் கிடப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பல வாரங்களாக நடுக்கடலில் முகாமிட்டுள்ள வீரர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்காததால், அவர்களின் மன உறுதி (Morale) கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளுடன் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், மறுபுறம் வீரர்களுக்கு அடிப்படைத் தேவையான உணவு கூடக் கிடைக்காதது அமெரிக்காவிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. தனது வீரர்களைப் பட்டினியில் வைத்திருக்கும் ஒரு ராணுவத்தால், எப்படிப் போரில் வெற்றி பெற முடியும் என்ற கேள்வியைச் சர்வதேச ராணுவ வல்லுநர்கள் எழுப்புகின்றனர்.

Related News

Latest News