உலக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் அமெரிக்கா – ஈரான் மோதலில், இப்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான போர் முடிவுக்கு வரப்போவதாகவும், அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகப்போவதாகவும் மிகவும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும், அப்படி நடந்தால் தான் நேரில் பாகிஸ்தான் செல்லத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்
“அவர்கள் என்னை அங்கே வர விரும்புகிறார்கள்” என்று ட்ரம்ப் குறிப்பிட்டிருப்பது, சர்வதேச ராஜதந்திர வட்டாரங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலுடன் தொடங்கிய இந்தப் போர், ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கியதோடு உலக அளவில் கச்சா எண்ணெய் விலையையும் கடுமையாக உயர்த்தியது. இந்த இக்கட்டான சூழலில், அடுத்த வாரம் முடிவடைய உள்ள தற்காலிக போர்நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும், அதற்கு முன்பே ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்படும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
மேலும், ஈரான் தனது அணுசக்தி திட்டங்களைக் கைவிட ஒப்புக்கொண்டுள்ளதாகவும், குறிப்பாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்கச் சம்மதித்துள்ளதாகவும் ஒரு அதிரடியான தகவலைத் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ஒரு முக்கிய மத்தியஸ்தராகச் செயல்பட்டு வருவது கவனிக்கத்தக்கது. லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர்நிறுத்தத்தை ஈரான் வரவேற்றுள்ள நிலையில், இது அமெரிக்காவுடன் எட்டப்பட்ட ஒரு ரகசியப் புரிதலின் ஒரு பகுதி என்று ஈரான் தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தப் பணிகளை ஒருங்கிணைக்கத் தனது உயர்மட்டக் குழுவினரான ஜே.டி. வான்ஸ் மற்றும் மார்கோ ரூபியோ ஆகியோருக்கு ட்ரம்ப் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் லெபனான் அதிபர் ஜோசப் அவுன் ஆகியோருடன் தான் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் விரைவில் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.நீண்டகாலமாகப் பகை நாடுகளாக இருந்த அமெரிக்காவும் ஈரானும், பாகிஸ்தான் மண்ணில் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் இணைந்தால், அது மத்திய கிழக்கு பிராந்தியத்தின் வரலாற்றையே மாற்றியமைக்கும்.
ஒருபுறம் அமைதிக்கான முயற்சிகள் நடந்தாலும், மறுபுறம் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் போர் மீண்டும் தொடங்கும் என்ற எச்சரிக்கையும் மறைமுகமாக நீடிக்கிறது. டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த பாகிஸ்தான் பயணம் உறுதியானால், அது தெற்காசிய அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
