தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆர்வம் ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெறுகிறது. இது 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறுகிறது.
பொறியியல் படிப்பை பொறுத்தவரை நல்ல கல்லூரியில், கேம்பஸ் இண்டர்வியூவில் அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்க வேண்டும் என்பதே பலரின் கனவாக உள்ளதால் டாப் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கே இந்த வாய்ப்பு கிடைக்கிறது. இந்தநிலையில் கட் ஆஃப் குறைவாக இருந்தாலும் டாப் கல்லூரிகளில் சேர என்ன வேண்டும் என்பதை பிரபல கல்வி ஆலோசகர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் விளக்கியுள்ளார்.
அதன்படி, பொறியியல் கட் ஆஃப் 120 – 170 மதிப்பெண்கள் பெற்றவர்களும் டாப் கல்லூரிகளில் சேரலாம். அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பொறுத்தவரை முதலில் டாப் கல்லூரிகளை தேர்வு செய்துக் கொள்ளுங்கள். கோர்ஸை விட கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுங்கள். முதன்மை கோர்ஸூக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், அது சார்ந்த படிப்புகளை டாப் கல்லூரியில் படிக்க முயற்சிப்பது நல்ல முடிவாக இருக்கும்.
பொறியியல் கலந்தாய்வில் 170 கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு குறைவாக இருந்து டாப் கல்லூரிகளில் சேர, கோர்ஸ்களை தேர்வு செய்வதில் சமரசத்துடன் இருங்கள். இப்படி கோர்ஸ்களில் சமரசம் செய்தால் டாப் 40 கல்லூரிகளிலே சேரலாம். 130 – 140 கட் ஆஃப் ரேஞ்சில் உள்ளவர்கள் 2 ஆம் கட்ட, 3 ஆம் கட்ட கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த கோர்ஸ்களை தேர்வு செய்யலாம்.
2 ஆம் கட்ட, 3 ஆம் கட்ட கல்லூரிகளை தேர்வு செய்யும்போது வேலை வாய்ப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை பாருங்கள். மேலும் அந்தக் கல்லூரிகளில் படிக்கும்போது கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
