‘கப்பல்களை மூழ்கடிப்போம்!’ – அமெரிக்காவை அலற வைத்த ‘ஈரான்’!

“உங்கள் கப்பல்கள் கடலில் மூழ்கடிக்கப்படும்” – என்று அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்துள்ள இந்த பகிரங்க மரண மிரட்டல், ஹார்முஸ் நீரிணையில் பற்றி எரியும் பதற்றத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. ஆனால், மறுபுறம் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள ஒரு விசித்திரமான பதிவு, உலக அரசியல் அரங்கில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் ராணுவ ஆலோசகரான மோஷென் ரெசாயி, அமெரிக்காவின் கடற்படை முற்றுகைக்கு எதிராகக் கொந்தளித்துள்ளார். “ஹார்முஸ் நீரிணையின் போலீஸ்காரராக ட்ரம்ப் மாற விரும்புகிறாரா? உங்கள் கப்பல்கள் எங்கள் முதல் ஏவுகணைக்கே மூழ்கடிக்கப்படும். உங்களை அழிக்கும் சக்தி எங்களுக்கு உள்ளது” என்று அவர் ஆவேசமாக எச்சரித்துள்ளார். மேலும், போர்நிறுத்தத்தை நீட்டிப்பதை எதிர்ப்பதாகவும், தரைவழித் தாக்குதல் நடத்தினால் அமெரிக்க வீரர்களைப் பணயக்கைதிகளாகப் பிடிப்போம் என்றும் அவர் மிரட்டியுள்ளார்.

ஆனால், ஈரானின் இந்த போர் முழக்கத்திற்கு மத்தியில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் முற்றிலும் முரணான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். “ஹார்முஸ் நீரிணையை நான் நிரந்தரமாகத் திறக்கிறேன். சீனா இதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்கள் ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்ப மாட்டார்கள் என ஒப்புக்கொண்டுள்ளனர். சில வாரங்களில் நான் சீனா செல்லும்போது, அதிபர் ஷி எனக்கு ஒரு பெரிய அணைப்பைக் கொடுப்பார்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

ஒருபக்கம், ஈரானின் ராணுவ ஆலோசகர், கப்பல்களை மூழ்கடிப்போம் என மிரட்டுகிறார். மறுபக்கம், அமெரிக்க அதிபரோ, சீனாவுடன் ஒப்பந்தம் போட்டுவிட்டதாகவும், அணைப்பு கிடைக்கப் போவதாகவும் கூறுகிறார். ஒருபக்கம் போர், மறுபக்கம் பேச்சுவார்த்தை, இன்னொரு பக்கம் விசித்திரமான சமூக வலைதளப் பதிவுகள் என, ஹார்முஸ் நீரிணையில் உண்மையில் என்னதான் நடக்கிறது என்பது ஒரு விடை தெரியாத கேள்வியாகவே தொடர்கிறது.

Related News

Latest News