உலகம் முழுவதும் வேலை செய்பவர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினை விலைவாசி உயர்வு மற்றும் அதற்கேற்ற சம்பள உயர்வு இல்லாமை ஆகும். குறிப்பாக இந்தியாவில் இது நாள்தோறும் பேசப்படும் விஷயமாக உள்ளது. சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு, வன்முறையிலும் இறங்கினர்.
அலுவலகங்கள் மற்றும் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நக்சலிச சதியாக கூறியிருந்தாலும், பலர் இதை தொழிலாளர்களின் நீண்டநாள் மனக்குமுறலின் வெளிப்பாடாகக் கருதுகின்றனர். எனினும், வன்முறை எந்த நிலையிலும் தீர்வாக அமையாது என்பதே உண்மை.
இதேபோல், சீனாவின் ஷாங்கியூ பகுதியில் நடந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. குறைந்த சம்பளத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க, ஒரு இளம்பெண் தனது அலுவலகத்தில் வேலை நேரத்திலேயே மேஜையில் படுத்து ஐந்து மணிநேரம் தூங்கினார். “சம்பளத்திற்கு ஏற்ற அளவில்தான் வேலை செய்ய முடியும்” என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர் இதை செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால் பின்னர் நடந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் தூங்கி எழுந்தபின், தனது மேலாளரின் மேஜையில் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிட்டார். அந்த மேலாளருக்கு ரத்த சர்க்கரை குறைவாகும் பிரச்சினை இருந்ததால், அவசரத்திற்காக அந்த சாக்லேட்டை வைத்திருந்தார்.
அது இல்லாததால் அவர் மயக்க நிலைக்கு சென்றார். இதனால் கோபமடைந்த மேலாளர், அந்த பெண்ணை கடுமையாக கண்டித்தார். சமூக வலைதளங்களில் அந்த பெண்ணுக்கு எதிராகவே கருத்துகள் வந்துள்ளன. தற்போது, நிறுவனமும் அவரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. சீனாவில் வேலைப்பளு (Workload) குறித்த விவாதங்கள் வருவது வழக்கம் தான் , ஆனால் இந்தப் பெண்ணின் அதீதப் போராட்டம் அவருக்கே எதிராகத் திரும்பியுள்ளது.
