அமெரிக்காவுக்கு மரண ‘அடி’! – ஈரானில் சுருண்டு விழுந்த 2000 கோடி ‘ட்ரோன்’!

ஈரான் உடனான போரில், உலகின் மிகப்பெரும் ராணுவ சக்தியான அமெரிக்கா, தொடர் இழப்புகளைச் சந்தித்து வருவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் உச்சகட்டமாக, அமெரிக்காவின் மிகவும் விலையுயர்ந்த மற்றும் அதிநவீன உளவு ட்ரோன்களில் ஒன்றான MQ-4C டிரைட்டன், ஈரான் போர்க்களத்தில் செயலிழந்து விழுந்ததை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஒரு ட்ரோனின் மதிப்பு மட்டும் சுமார் 240 மில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 2000 கோடி ரூபாய்.

கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி, பாரசீக வளைகுடாப் பகுதியில் உளவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இந்த ட்ரோன் திடீரென ராடார் பார்வையில் இருந்து மறைந்து போனது. இது ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என ஆரம்பத்தில் தகவல்கள் பரவிய நிலையில், அது விபத்துக்குள்ளாகி விழுந்துவிட்டதாக அமெரிக்க கடற்படை பாதுகாப்பு மையம் தற்போது தெரிவித்துள்ளது. இந்த இழப்பு, ‘கிளாஸ் ஏ’ வகையிலான மிக மோசமான விபத்தாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. 50,000 அடி உயரத்திற்கு மேல், 24 மணி நேரத்திற்கும் மேலாகப் பறந்து உளவு பார்க்கக்கூடிய இந்த ட்ரோனின் இழப்பு, அமெரிக்காவுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ஆனால், இதுவொரு தனித்த இழப்பு அல்ல. இந்த ஈரானியப் போரில், அமெரிக்கா சந்தித்துள்ள மொத்த இழப்புகளின் பட்டியல் மலைக்க வைக்கிறது. குவைத்தின் தவறான தாக்குதலில் மூன்று F-15 போர் விமானங்கள், ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட மேலும் ஒரு F-15 மற்றும் ஒரு A-10 ரக விமானம், ஈராக்கில் விபத்துக்குள்ளான ஒரு KC-135 எரிபொருள் நிரப்பும் விமானம் என அமெரிக்காவின் இழப்பு பட்டியல் நீள்கிறது. இதில் 6 விமானிகளும் உயிரிழந்துள்ளனர்.

அனைத்திற்கும் மேலாக, அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது 24 MQ-9 ரீப்பர் ட்ரோன்களின் இழப்பாகும். இதன் மதிப்பு மட்டும் 720 மில்லியன் டாலர்கள். தற்போது செயலிழந்த 240 மில்லியன் டாலர் டிரைட்டன் ட்ரோனையும் சேர்த்தால், இந்த போரில் அமெரிக்காவின் ட்ரோன் இழப்புகளின் மதிப்பு மட்டுமே கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர்களை, அதாவது 8,300 கோடி ரூபாயைத் தொட்டுள்ளது. இந்த மாபெரும் நிதி இழப்பு, நவீனப் போரின் மிக விலையுயர்ந்த முகத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

Related News

Latest News