உலகையே அதிரவைத்த ஈரானின் ‘ஸ்பை சாட்டிலைட்’! அமெரிக்காவுக்கு செக் வைத்த சீனா!

உலக அரசியலில் இப்போது ஒரு மிகப்பெரிய ரகசியம் அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2024-ஆம் ஆண்டின் இறுதியில், சீனாவிடமிருந்து ஈரான் ஒரு அதிநவீன உளவுப் பார்க்கும் செயற்கைக்கோளை ரகசியமாக வாங்கியிருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. TEE-01B என்று அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோள், வெறும் வணிகப் பயன்பாட்டிற்காக ஏவப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் இது ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையான IRGC-ன் முழுக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்தது தற்போது கசிந்த ராணுவ ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த ‘ஸ்பை சாட்டிலைட்’ சாதாரணமானது கிடையாது. இது விண்வெளியில் இருந்தபடி மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மேற்கத்திய நாடுகளின் ராணுவ நிலைகளை மிகத் துல்லியமாக படம் பிடித்து ஈரான் ராணுவத்திற்கு அனுப்பியுள்ளது. குறிப்பாக, சவூதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளம், ஜோர்டான் மற்றும் ஈராக் நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைத் தாக்குவதற்கு இந்த செயற்கைக்கோள் வழங்கிய தரவுகளே மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. இந்தத் தாக்குதல்களுக்கு முன்பும் பின்பும், அந்த இடங்களை மிகத் தெளிவான படங்களாக எடுத்து, தாக்குதலின் பாதிப்பு எவ்வளவு என்பதை ஈரான் ராணுவம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இது உதவியிருக்கிறது.

இதில் மற்றொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த செயற்கைக்கோளை இயக்க பெய்ஜிங்கைச் சேர்ந்த ‘எம்போசாட்’ (Emposat) என்ற நிறுவனம் தனது தரைக்கட்டுப்பாட்டு நிலையங்களை ஈரானுக்குப் பயன்படுத்த அனுமதித்துள்ளது. இதன் மூலம் ஈரானால் தனது சொந்த நாட்டு எல்லைகளையும் தாண்டி, தென்னமெரிக்கா மற்றும் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்தும் தகவல்களைத் தடையின்றிப் பெற முடிந்தது. ஈரானின் உள்நாட்டு விண்வெளித் திட்டங்களுக்கு இருந்த பல கட்டுப்பாடுகளைத் தகர்த்து, சர்வதேச தரத்தில் ஒரு உளவுப் பிணையத்தை இதன் மூலம் சீனா உருவாக்கித் கொடுத்துள்ளது.

இந்த விவகாரம் வெளியே வந்தவுடன் அமெரிக்கா கடும் கொதிப்படைந்துள்ளது. ஈரானுக்கு இது போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை வழங்கினால் சீனா பெரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சீனா இந்த குற்றச்சாட்டுகளை மொத்தமாக மறுத்துள்ளது. இது போன்ற செய்திகள் அனைத்தும் திட்டமிட்டு பரப்பப்படும் பொய்கள் என்றும், ஆதாரமற்றவை என்றும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது. எது எப்படியோ, விண்வெளியில் நடந்த இந்த ரகசிய ஒப்பந்தம், இப்போது உலக நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகளில் ஒரு பெரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.

Related News

Latest News