அமெரிக்க கப்பலை விரட்டியடித்த ஈரான்? மீண்டும் தொடங்கியது மோதல் ?

சர்வதேச கடல் எல்லையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் ஒரு முக்கிய செய்தி. உலகின் மிக முக்கியமான கடல் வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில், அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே மீண்டும் ஒரு மோதல் போக்கு உருவாகியுள்ளது. அமெரிக்காவின் இரண்டு போர்க்கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்ததாக அமெரிக்கா கூறிய நிலையில், அதனை ஈரான் திட்டவட்டமாக மறுத்ததோடு, அமெரிக்கக் கப்பலை நாங்கள் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினோம் என்று கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

முன்னதாக அமெரிக்க ராணுவம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், நடைபெற்று வரும் போருக்குப் பிறகு முதல் முறையாக, தங்களது இரண்டு அதிநவீன போர்க்கப்பல்கள், கடலில் உள்ள கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்காக ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்றதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருந்தது. இது ஒரு வழக்கமான நடவடிக்கைதான் என்றும் அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், அமெரிக்காவின் இந்தக் கூற்றை ஈரான் ராணுவத்தின் கூட்டு கட்டளைப் பிரிவு செய்தித் தொடர்பாளர் முற்றிலுமாக நிராகரித்துள்ளார். “அமெரிக்காவின் எந்த போர்க்கப்பலும் இந்த ஜலசந்தியைக் கடக்கவில்லை. இந்த ஜலசந்தி வழியாக எந்தவொரு கப்பல் செல்வதாக இருந்தாலும், அதன் மீதான முடிவெடுக்கும் முழு அதிகாரமும், முன்முயற்சியும் இஸ்லாமிய குடியரசின் ஆயுதப் படைகளிடம்தான் உள்ளது” என்று அவர் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார். மேலும், அந்த வழியே நுழைய முயன்ற ஒரு அமெரிக்க ராணுவக் கப்பலை, தங்கள் படையினர் தடுத்து நிறுத்தி, வந்த வழியே திரும்பிப் போக வைத்ததாகவும் ஈரானின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாரசீக வளைகுடாவின் நுழைவு வாயிலாக இருக்கும் இந்த ஹார்முஸ் ஜலசந்தி, ஒரு காலத்தில் உலகின் மொத்த எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் 20 சதவீதத்தைக் கையாண்ட ஒரு மிக முக்கியப் பகுதியாகும். தற்போதைய சூழலில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்ற நிலையில், இரு நாடுகளும் இப்படி முரண்பட்ட தகவல்களை வெளியிடுவது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருவரையொருவர் மாற்றி மாற்றி குற்றம் சாட்டிக்கொள்ளும் இந்த நிகழ்வு, ஹார்முஸ் கடல் பகுதியில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Related News

Latest News