இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ மீது, TRAI (Telecom Regulatory Authority of India) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜியோவின் சில ரீசார்ஜ் திட்டங்கள் வெளிப்படைத்தன்மை இல்லாமல், ஒருதலைபட்சமாக இருப்பதாக TRAI குற்றம்சாட்டியுள்ளது. இதனால், அனைத்து பிளான்களையும் எல்லா தளங்களிலும் ஒரே நேரத்தில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களை ஏப்ரல் 14க்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
TRAI குறிப்பிட்ட முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று, ஜியோ சில மலிவு விலை திட்டங்களை குறிப்பிட்ட தளங்களில் மட்டுமே வழங்குவதாகும். உதாரணமாக, ரூ.249 மற்றும் ரூ.199 போன்ற திட்டங்கள் ஜியோ ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்கின்றன. அதேபோல், ரூ.209 திட்டம் MyJio ஆப்பில் மட்டும் வழங்கப்படுகிறது. இது வாடிக்கையாளர்களை குழப்புவதோடு விதிமீறலாகும் என்று TRAI தெரிவித்துள்ளது.
மேலும், ஜியோ நிறுவனம் ஜியோ போன் மற்றும் ஜியோ பாரத் போன்ற சாதனங்களுக்கு மட்டும் தனியாக சில மலிவு விலை திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்கள் மற்ற ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு கிடைக்காததால், இது ஒருதலைபட்சமான நடைமுறையாக TRAI சுட்டிக்காட்டியுள்ளது. அனைத்து மொபைல் பயனர்களுக்கும் சமமான திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு பதிலளித்த ஜியோ, “எங்கள் திட்டங்கள் குறிப்பிட்ட வாடிக்கையாளர் பிரிவை மையமாகக் கொண்டவை. அதனால் இதை ஒருதலைபட்சம் என்று கூற முடியாது. மேலும், சில சேவைகளை ஆன்லைனில் வழங்க இயலாது” என்று விளக்கம் அளித்தது. ஆனால் TRAI இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ளது.
அனைத்து ரீசார்ஜ் திட்டங்களும் ரீடெய்ல் கடைகள், அதிகாரப்பூர்வ இணையதளம், மொபைல் ஆப் மற்றும் கஸ்டமர் கேர் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் ஒரே நேரத்தில் கிடைக்க வேண்டும் என்று TRAI வலியுறுத்தியுள்ளது. மேலும், குறிப்பிட்ட மொபைல்களுக்கு மட்டும் வழங்கப்படும் திட்டங்களையும், அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும்படி மாற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை ஏப்ரல் 14க்குள் ஜியோ பின்பற்றவில்லை என்றால், TRAI சட்டம் 1997ன் கீழ் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. முதல் விதிமீறலுக்கு ரூ.1 லட்சம் அபராதமும், தொடர்ந்து ஒவ்வொரு மீறலுக்கும் ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மேலும், விதிகளை பின்பற்றும் வரை தினமும் கூடுதல் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
