அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், உலக நாடுகளை அதிரவைக்கும் ஒரு புதிய ராணுவத் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையில் எடுத்துள்ளார்.
ஈரானிடம் உள்ள சுமார் நானூறு கிலோ எடையுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை, தரைவழித் தாக்குதல் மூலமாகப் பறிமுதல் செய்ய பென்டகன் தீவிரமாகத் தயாராகி வருகிறது. பாகிஸ்தான் போன்ற நாடுகளின் மத்தியஸ்தத்துடன் ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தாலும், ஈரான் தனது அணு ஆயுதத் திட்டங்களை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பதில் அமெரிக்கா மிக உறுதியாக இருக்கிறது.
அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் இந்த யுரேனியத்தை ஈரான் தாமாகவே முன்வந்து ஒப்படைக்க வேண்டும், இல்லையென்றால் அமெரிக்கப் படைகள் ஈரானுக்குள் நேரடியாக நுழைந்து அதை வலுக்கட்டாயமாகப் பறிமுதல் செய்யும் என ட்ரம்ப் பகிரங்கமான இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்த அதிரடி ஆபரேஷனுக்காக சுமார் பத்தாயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களை மத்திய கிழக்கு நாடுகளை நோக்கிக் களமிறக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த திட்டம் அவ்வளவு எளிதானது அல்ல என ராணுவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்கா ஏற்கனவே நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் அணு உலைகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதால், அந்த யுரேனியம் அனைத்தும் தற்போது மலைகளுக்கு அடியில் உள்ள ரகசிய சுரங்கங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அங்கு நுழைந்து, ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களைச் சமாளித்து, கண்ணிவெடிகளை அகற்றி, அந்த யுரேனியத்தை சிறப்புப் பாதுகாப்பு சிலிண்டர்களில் அடைத்து வெளியே கொண்டு வருவது என்பது மிகவும் சவாலான ஒரு காரியமாகும். இதற்காக ஈரானுக்குள் தற்காலிகமாக ஒரு புதிய விமான ஓடுதளத்தை அமைக்க வேண்டிய கட்டாயமும் அமெரிக்கப் படைகளுக்கு ஏற்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா ஈரானுக்குள் நேரடியாக நுழைந்தால், இந்த போர் பல மாதங்களுக்கு நீடிக்கும் அபாயம் உள்ளது. இதனாலேயே, அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநரான துளசி கப்பார்டு (Tulsi Gabbard) மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோர் இந்த விவகாரத்தில் சற்று மென்மையான அணுகுமுறையைக் கையாளுமாறு ட்ரம்புக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
வரவிருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலில் இந்த போர் மிகப்பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், நீண்ட காலப் போரில் சிக்கிக்கொள்ள ட்ரம்பும் விரும்பவில்லை. இருப்பினும், ஈரான் கையில் அணு ஆயுதம் கிடைத்தால் அவர்கள் அதை உடனடியாகப் பயன்படுத்துவார்கள் என்ற நிலைப்பாட்டில் ட்ரம்ப் மிக உறுதியாக இருப்பதால், எந்த நேரத்திலும் ஈரானில் அமெரிக்கப் படைகள் ஊடுருவலாம் என்ற உச்சக்கட்ட பதற்றம் தற்போது சர்வதேச அளவில் நிலவி வருகிறது.
