ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல துறைகளில் புதிய விதிமுறைகளை கொண்டு வருகின்றன. அதுபோல, ரயில் டிக்கெட் ரத்து செய்து ரீஃபண்ட் பெறும் நடைமுறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகள் 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளன.
இந்தியாவில் நீண்ட தூர பயணங்களுக்கு மக்கள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து ரயில் சேவையாகும். இதனால் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில் ரயில்வே துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, ரயில் புறப்படுவதற்கு முன் 8 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை ரத்து செய்தால் எந்த தொகையும் திருப்பி வழங்கப்படாது.
ரயில் புறப்படும் நேரத்திற்கு 24 மணி நேரம் முதல் 8 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை ரத்து செய்தால், கட்டணத்தின் 50% மட்டுமே ரீஃபண்ட் வழங்கப்படும்.
72 மணி நேரம் முதல் 24 மணி நேரத்திற்கு முன்பாக டிக்கெட் ரத்து செய்தால், 75% தொகை திருப்பி வழங்கப்படும்.
ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக டிக்கெட் ரத்து செய்தால் முழு தொகையும் (100%) திருப்பி வழங்கப்படும்.
மேலும், முன்பு ஆஃப்லைன் டிக்கெட்டுகளை பதிவு செய்த நிலையத்தில் மட்டுமே ரத்து செய்ய முடிந்த நிலையில், தற்போது எந்த ரயில் நிலையத்திலும் அவற்றை ரத்து செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் தங்கள் ஏறும் நிலையத்தை மாற்றிக் கொள்ளும் வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. ரயில் புறப்படும் நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்புவரை போர்டிங் ஸ்டேஷனை மாற்றிக் கொள்ள முடியும்.
இந்த மாற்றங்கள் அனைத்தும் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தவும், ரயில்வே சேவைகளை நவீனப்படுத்தவும் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
