இந்த கனெக்‌ஷனுக்கு மாறிட்டா சிலிண்டர் பத்தின கவலையே இருக்காது

ஈரான் போரின் தாக்கம் நேரடியாக நம் வீட்டு சமையலறை வரை வந்து விட்டதாக சொல்லப்படுகிறது. முன்பு போல எளிதாக எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு செய்தால் 2–3 நாட்களில் கிடைக்கும் நிலைமை தற்போது இல்லை.

பல இடங்களில் 10 முதல் 15 நாட்கள் ஆகியும் சிலிண்டர் டெலிவரி கிடைக்கவில்லை என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சிலிண்டர் விநியோக அலுவலகங்கள் மற்றும் குடோன்களில் காலி சிலிண்டர்களுடன் மக்கள் காத்திருக்கும் சூழலும் உருவாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில் மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எல்பிஜி இணைப்பு வைத்திருப்பவர்கள், அவர்களது வீட்டில் பிஎன்ஜி (குழாய் வழி இயற்கை எரிவாயு) இணைப்பு பெறும் வசதி இருந்தால் அதற்கு மாறிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும், பிஎன்ஜி வசதி இருந்தும் எல்பிஜியிலேயே தொடர விரும்பினால், அந்த எல்பிஜி இணைப்பு மூன்று மாதங்களில் துண்டிக்கப்படும் என்ற எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே பல லட்சக்கணக்கான குடும்பங்கள் பிஎன்ஜி இணைப்புக்கு மாறி உள்ளன. பிஎன்ஜி பயன்படுத்துவோருக்கு சிலிண்டர் பற்றாக்குறை என்ற கவலை இல்லை. குழாய் வழியாக நேரடியாக 24 மணி நேரமும் எரிவாயு கிடைக்கும். சிலிண்டர் முன்பதிவு செய்யவும், காத்திருக்கவும் தேவையில்லை.

பிஎன்ஜி இணைப்பு பெறுவதற்கான நடைமுறை:

முதலில் உங்கள் பகுதியில் பிஎன்ஜி சேவை வழங்கும் நிறுவனங்கள் உள்ளனவா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். பாதுகாப்பு டெபாசிட் தொகையாக ரூ.5000 முதல் ரூ.10000 வரை வசூலிக்கப்படலாம். அதற்கு பிறகு தொழில்நுட்ப நிபுணர்கள் உங்கள் வீட்டிற்கு வந்து ஆய்வு செய்வார்கள்.

உங்கள் வீட்டில் வசதி இருந்தால் குழாய் அமைத்தல், கேஸ் மீட்டர் பொருத்துதல் போன்ற பணிகள் நடைபெறும். அனைத்து பாதுகாப்பு சோதனைகளும் முடிந்த பின் பிஎன்ஜி விநியோகம் தொடங்கப்படும்.

பிஎன்ஜியின் முக்கிய நன்மைகள்:

  • சிலிண்டர் வாங்க தேவையில்லை
  • முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை
  • 24 மணி நேரமும் கேஸ் கிடைக்கும்
  • பயன்பாட்டிற்கு ஏற்ப மீட்டர் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும்
  • எல்பிஜியுடன் ஒப்பிடும்போது மாத செலவு சுமார் 20% வரை குறைவாக இருக்கும்

இது தற்போது பெரும்பாலும் பெரிய நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது. சென்னையில் வடசென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் பிஎன்ஜி சேவை வழங்கப்படுகிறது. பெரம்பூர், ராயபுரம், ஓஎம்ஆர், சோழிங்கநல்லூர், தாம்பரம், அம்பத்தூர், ஆவடி போன்ற பகுதிகளில் இந்த வசதி கிடைக்கிறது.

Related News

Latest News