ரூ. 50,000 -க்கு மேல் பணம் எடுத்து செல்லலாமா? – தேர்தல் அதிகாரி விளக்கம்

ரூ. 50,000 -க்கு மேல் பணம் எடுத்துச் செல்வது குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் புதன்கிழமை விளக்கம் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:

“வணிகச் சங்கங்கள் உள்பட பலர் ரூ. 50,000 என்ற உச்ச வரம்பை உயர்த்த வலியுறுத்தியுள்ளனர். அவர்களின் கோரிக்கையைத் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம். தற்போதைய சட்ட விதிமுறைகளின்படி, ரூ. 50,000 வரை மட்டுமே பணமாக கொண்டு செல்ல முடியும்.

பொதுமக்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று பறக்கும் படைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பணம் எதற்காக எடுத்துச் செல்கிறார்களோ அதுதொடர்பான ஏதேனும் ஆவணங்கள் இருந்தால் ரூ. 50,000-க்கு மேல் எடுத்துச் செல்லலாம். மருத்துவச் செலவுகளுக்காக அதிக பணம் எடுத்துச் செல்பவர்கள் வாட்ஸ்அப்பில் ஆவணங்களைக் காட்டினால்கூட போதும்.

கிராமப்புறப் பகுதிகளில் தான் ஆவணங்கள் இல்லாமல் அதிக பணம் எடுத்துச் செல்லும் பிரச்னை அதிகமாக இருக்கின்றது. சந்தையில் இருந்து வருபவர்களிடம் ஆவணங்கள் இல்லை போன்ற பிரச்னைகள் உள்ளன. மக்களிடம் போதிய விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

Related News

Latest News