டீப்ஃபேக் என்றால் என்ன? உண்மை எது? போலி எது? கண்டறிவது எப்படி?

டீப்ஃபேக் என்றால் என்ன? உண்மை எது, போலி எது என்பதை எப்படி கண்டறிவது என்பதை எளிமையாகப் புரிந்துகொள்வோம்.

டீப்ஃபேக் என்பது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்படும் வீடியோ, படம் அல்லது ஆடியோ ஆகும். இதில், ஒருவர் உண்மையில் செய்யாத செயலை அவர் செய்தது போலவும், சொல்லாத வார்த்தைகளை அவர் கூறியது போலவும் காட்ட முடியும்.

உண்மையான வீடியோக்களில் AI மூலம் உருவாக்கப்பட்ட முக அசைவுகள் மற்றும் குரல் மாதிரிகளை இணைத்து இவை உருவாக்கப்படுகின்றன. இதனால், முதல் பார்வையில் இவை உண்மையா போலியா என்பதை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும்.

இத்தகைய டீப்ஃபேக் உள்ளடக்கங்கள் தவறான தகவல்களை பரப்பவும், ஒருவரின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கவும், மக்களை தவறாக வழிநடத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.

டீப்ஃபேக் வீடியோவை எப்படி அடையாளம் காணலாம்?

ஒரு வீடியோ டீப்ஃபேக் என்பதை அறிய சில அறிகுறிகள் உள்ளன. முக அசைவுகள் இயற்கைக்கு மாறாக இருக்கலாம். கண் சிமிட்டல்கள் இயல்பாக இருக்காமல் தோன்றலாம். முகத்தைச் சுற்றி மங்கலான விளிம்புகள் இருக்கலாம். உதட்டின் அசைவுகள் பேசும் குரலுடன் சரியாக பொருந்தாமல் இருக்கலாம்.

மேலும், முகத்தில் விழும் வெளிச்சம் மற்றும் பின்னணி வெளிச்சம் ஒன்றுடன் ஒன்று பொருந்தாமல் இருக்கலாம். முகபாவனைகள் இயல்பாக இல்லாமல், விறைப்பாகவோ அல்லது மெதுவாக அசையும் விதமாகவோ இருக்கலாம். இத்தகைய சிறிய விவரங்களை கவனமாகப் பார்த்தால் டீப்ஃபேக் உள்ளடக்கத்தை சந்தேகிக்க முடியும்.

டீப்ஃபேக் மோசடிகளில் சிக்காமல் இருப்பது எப்படி?

சந்தேகத்திற்குரிய லிங்குகள்

பரபரப்பான தலைப்புகளுடன் வரும் அறிமுகமில்லாத லிங்குகளை கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும்.

உண்மைத்தன்மை சரிபார்ப்பு

ஏதேனும் தகவலை நம்புவதற்கு முன், அது நம்பகமான செய்தி நிறுவனங்களில் வெளியாகியுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

தனியுரிமை பாதுகாப்பு

சமூக ஊடகங்களில் உங்கள் தனியுரிமை அமைப்புகளை வலுப்படுத்துங்கள். தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிரும் போது கவனமாக இருக்கவும்.

புகார் அளித்தல்

போலியான அல்லது தவறான தகவல்களை கண்டால் உடனடியாக அந்த சமூக ஊடக தளங்களில் புகார் அளிக்க வேண்டும்.

டீப்ஃபேக் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. எனவே, டிஜிட்டல் விழிப்புணர்வு மிகவும் அவசியம். எந்த தகவலையும் உறுதிப்படுத்தாமல் பகிர்வதை தவிர்ப்பது, தவறான தகவல் பரவலைக் கட்டுப்படுத்த உதவும். அதனால், டீப்ஃபேக் வீடியோக்கள் குறித்து எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

Related News

Latest News