ஆதார் ஆப் இல்லாம புது போன் வாங்க முடியாது? ஆப்பிள், சாம்சங் கவலை

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களிலும் ஆதார் செயலியை முன்பே நிறுவி வழங்க வேண்டும் என்ற யோசனையை மத்திய அரசு முன்வைத்துள்ளது. ஆனால், ஆப்பிள், சாம்சங், கூகுள் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவர்கள் முக்கியமாக பயனர்களின் தனியுரிமை, தரவு பாதுகாப்பு மற்றும் உற்பத்திச் செலவு அதிகரிப்பு போன்ற அம்சங்களை காரணங்களாகக் கூறுகின்றனர்.

இந்தத் திட்டத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் முன்னெடுத்து வருகிறது. இந்தியாவில் 130 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி வருவதால், ஸ்மார்ட்போன்களில் ஆதார் ஆப் முன்பே இருந்தால், பயனர்கள் தங்கள் விவரங்களை எளிதாக புதுப்பிக்கவும், பயோமெட்ரிக் தகவல்களை பாதுகாப்பாக பூட்டவும் முடியும் என்று UIDAI கருதுகிறது. மேலும், ஆதார் சேவைகளை அதிகமான மக்களிடம் எளிதாக கொண்டு செல்லவும் இது உதவும் என்று கூறப்படுகிறது. ஆனால், இதற்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் சில முக்கிய கவலைகளை முன்வைக்கின்றன.

முதலில், ஆதார் தரவுகள் தொடர்பாக முன்னதாகவே பல தரவு கசிவு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த ஆப்பை அனைத்து சாதனங்களிலும் கட்டாயமாக முன்பே நிறுவுவது பயனர்களின் தனியுரிமைக்கு ஆபத்தாக இருக்கலாம் என அவர்கள் அஞ்சுகின்றனர்.

இரண்டாவது, இந்தியாவிற்கென தனிப்பட்ட உற்பத்தி முறைகளை மாற்ற வேண்டியிருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். மூன்றாவது, பயனர்கள் தாங்கள் விரும்பும் செயலிகளை மட்டும் நிறுவிக் கொள்ளும் சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த முயற்சி புதிதல்ல. இதற்கு முன் “சஞ்சார் சாத்தி” செயலியை முன்பே நிறுவ அரசாங்கம் முயன்றபோதும், நிறுவனங்களின் எதிர்ப்பால் அது அமல்படுத்தப்படவில்லை. அதேபோல், பேரிடர் எச்சரிக்கை வழங்கும் “சச்செட்” செயலியையும் முன்பே நிறுவுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த முடிவு எதிர்காலத்தில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.

Related News

Latest News