இஸ்ரேல் – அமெரிக்கா – ஈரான் போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் இந்த நேரத்தில், ஈரான் மீது தவறில்லை என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்து இருக்கிறது.
பிப்ரவரி 28ம் தேதி ஈரானுக்கு எதிராக அமெரிக்கா – இஸ்ரேல் நாடுகள் இணைந்து கூட்டாக போர் தொடுத்தன. 20 நாட்களைக் கடந்தும் போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. இந்தநிலையில் அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டிருக்கும் தகவல் ஒன்று சர்வதேச அளவில் மிகப்பெரிய கவனம் பெற்றுள்ளது.
கடந்த 2025ம் ஆண்டு அமெரிக்க, இஸ்ரேலிய தாக்குதல்களில் அழிக்கப்பட்ட அணுசக்தி செறிவூட்டல் நிலையங்களை, ஈரான் மீண்டும் கட்டியெழுப்புவதாக கூறி ட்ரம்ப் தற்போதைய போரை நியாயப்படுத்தி வருகிறார். இந்தநிலையில் ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் நிலையங்களை, அந்நாட்டு அரசு மீண்டும் கட்டியெழுப்பி வருவதற்கு எந்த உறுதியான ஆதாரங்களும் இல்லை என, அமெரிக்க உளவுத்துறை தெரிவித்து டிரம்பிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
முன்னதாக, ”ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், பொருளாதார ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முற்படக்கூடும். ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஒரு பரந்த பிராந்திய மோதலைத் தூண்டக்கூடும்.
குறிப்பாக வளைகுடா நாடுகள் அமெரிக்கத் தாக்குதல்களை அங்கீகரிப்பதாகவோ அல்லது ஆதரிப்பதாகவோ ஈரான் கருதினால், அந்நாடுகளின் தலைநகரங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தக்கூடும் என்று போருக்கு முன்னரே ட்ரம்ப்புக்கு விளக்கம் அளித்தோம்,” என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
