சில வீடுகளின் முன்பாக சிவப்பு அல்லது நீல நிற தண்ணீர் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் தொங்கவிடப்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம். இவ்வாறு வண்ண தண்ணீர் பாட்டில்களை தொங்கவிட்டால் நாய்கள் அந்த இடத்திற்கு வராது அல்லது பயந்து ஓடிவிடும் என்ற நம்பிக்கை பலரிடமும் உள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் இந்த நடைமுறை இன்னும் பல இடங்களில் பின்பற்றப்படுகிறது.
ஆனால் இதன் பின்னணியில் உண்மையில் அறிவியல் ஆதாரம் உள்ளதா?
இந்த நம்பிக்கையை புரிந்துகொள்ள முதலில் நாய்கள் நிறங்களை எவ்வாறு பார்க்கின்றன என்பதை அறிய வேண்டும். அறிவியல் ஆய்வுகளின்படி, நாய்கள் மனிதர்களைப் போல பல நிறங்களை தெளிவாக வேறுபடுத்திப் பார்க்க முடியாது. அவை ஒரு வகை நிறக்குருடு (Color Blind) தன்மை கொண்டவை. அதாவது சிவப்பு, பச்சை, நீலம் போன்ற நிறங்களை மனிதர்கள் பார்க்கும் விதத்தில் நாய்களால் பார்க்க முடியாது.
இதனால் சிவப்பு அல்லது நீல நிற தண்ணீர் நிரப்பப்பட்ட பாட்டில்கள் நாய்களை பயமுறுத்தும் அல்லது விரட்டும் என்ற நம்பிக்கைக்கு அறிவியல் ஆதாரம் இல்லை என்று கூறப்படுகிறது. நாய்களின் நடத்தை நிறங்களால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.
நாய்கள் ஒரு இடத்தை அல்லது மனிதர்களை அடையாளம் காண்பது பெரும்பாலும் வாசனை மற்றும் ஒலி போன்ற உணர்வுகளின் அடிப்படையில்தான் நடைபெறுகிறது. எனவே வண்ண பாட்டில்கள் தொங்கவிட்டால் நாய்கள் ஓடிவிடும் என்ற கருத்து ஒரு பொதுவான நம்பிக்கையாக மட்டுமே கருதப்படுகிறது.
