மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் எல்.பி.ஜி. (சமையல் எரிவாயு) விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு மாற்று எரிசக்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவின் மொத்த எல்.பி.ஜி தேவையில் சுமார் 60 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இதில் 90 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே இந்தியாவிற்கு வருகிறது. தற்போது அப்பகுதியில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக கடல் வழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், இந்தியாவின் எல்.பி.ஜி நுகர்வில் சுமார் 55 சதவீதம் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விநியோகத்திற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்துள்ளது. இதற்காக ‘அத்தியாவசிய பொருட்கள் சட்டம்’ அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோ கெமிக்கல் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் புரோப்பேன் மற்றும் பியூட்டேன் போன்ற வாயுக்களை எல்.பி.ஜி உற்பத்திக்காக மாற்றுமாறு சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு எல்.பி.ஜி உற்பத்தி சுமார் 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகப் பயன்பாட்டில், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தடையற்ற எரிவாயு விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற வணிக நிறுவனங்களுக்கு அவர்களின் சராசரி மாத தேவையின் 20 சதவீதம் மட்டுமே வழங்கப்படும். இதை கண்காணிக்க இந்தியன் ஆயில் (IOCL), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL), பாரத் பெட்ரோலியம் (BPCL) நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் போன்ற வணிக நிறுவனங்கள் எல்.பி.ஜி-க்கு மாற்றாக மண்ணெண்ணெய், நிலக்கரி மற்றும் உயிரி எரிபொருள் துகள்களை ஒரு மாத காலத்திற்கு பயன்படுத்த சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் மாநிலங்களுக்கு கூடுதலாக 48,000 கிலோலிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், சிறு நுகர்வோருக்கு அதிக அளவில் நிலக்கரி வழங்குமாறு நிலக்கரி நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்களிடையே பீதி ஏற்படாமல் தடுக்க சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஊரகப் பகுதிகளில் அடுத்த சிலிண்டர் முன்பதிவு செய்யும் இடைவெளி 45 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் இந்த இடைவெளி 25 நாட்களாகவே தொடர்கிறது.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கவலை தெரிவித்தார். அதற்கு பதிலளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “இந்தியாவின் எரிசக்தி விநியோகம் பாதுகாப்பாக உள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை. சமையல் எரிவாயு விலையும் சர்வதேச சந்தையை விட குறைவாகவே பராமரிக்கப்படுகிறது” என்று கூறினார்.
மேலும், இந்தியா தற்போது 27 நாடுகளுக்குப் பதிலாக 40 நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருவதாகவும், ஹார்முஸ் ஜலசந்தியைத் தவிர்ந்த பிற வழிகள் மூலம் இறக்குமதி 70 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேவையற்ற வதந்திகளை நம்பி பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், சமையல் எரிவாயுவை தேவையற்ற முறையில் குவித்து வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கறுப்புச் சந்தையில் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வீட்டு சமையலறைகளுக்கான எரிவாயு விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும், விநியோகச் சங்கிலி சீராக இயங்கி வருவதாகவும் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
