இந்திய சந்தையில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் அவ்வப்போது விலை உயர்வு குறித்து அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கமான ஒன்றாகும். குறிப்பாக காலண்டர் ஆண்டின் தொடக்கமான ஜனவரி 1 மற்றும் நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் 1 ஆகிய நாட்களில் பெரும்பாலான நிறுவனங்கள் கார்களின் விலையை உயர்த்துவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில், நடப்பு 2025–26 நிதியாண்டு வரும் மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 1 முதல் 2026–27 நிதியாண்டு தொடங்க உள்ளது. இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கார் நிறுவனங்கள் விலை உயர்வு குறித்த அறிவிப்புகளை வெளியிடத் தொடங்கியுள்ளன.
இந்திய சந்தையில் முதன்முதலாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் விலை உயர்வு குறித்து அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் கார்கள் வரும் ஏப்ரல் 1 முதல் விலை உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 2 சதவீதம் வரை விலை உயர்த்தப்படும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
உற்பத்தி செலவுகள் அதிகரித்திருப்பதும், இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் இந்த விலை உயர்வுக்கான முக்கிய காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து ஆடி நிறுவனமும் தனது கார்களின் விலையை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தைப் போலவே, ஆடி நிறுவனத்தின் கார்களும் சுமார் 2 சதவீதம் வரை விலை உயர்த்தப்படவுள்ளன.
மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஆடி நிறுவனங்களைத் தொடர்ந்து மற்ற கார் நிறுவனங்களும் வரும் நாட்களில் விலை உயர்வு குறித்த அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார் நிறுவனங்கள் மட்டுமின்றி இருசக்கர வாகன நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே ஏப்ரல் மாதம் அல்லது அதற்கு பிறகு புதிய வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் கூடுதல் தொகையை செலவிட வேண்டிய நிலை ஏற்படலாம். விலை உயர்வை தவிர்க்க விரும்புபவர்கள் மார்ச் மாதத்திலேயே புதிய வாகனங்களை முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. இதனால் நடப்பு மார்ச் மாதத்தில் இந்திய சந்தையில் வாகனங்களின் விற்பனை மற்றும் முன்பதிவு எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
