நீங்கள் HDFC வங்கி வாடிக்கையாளரா? ஏடிஎம்-மில் அடிக்கடி பணம் எடுப்பவரா? அப்படியானால் இந்தச் செய்தி உங்கள் கவனத்திற்கு! இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC வங்கி, ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் விதிகளில் அதிரடியான ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
கார்டு இல்லாமல் யூ.பி.ஐ (UPI) மூலம் பணம் எடுக்கும் வசதியில் கொண்டு வரப்பட்டுள்ள இந்தப் புதிய மாற்றம், வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரப்போகிறது. அது என்ன மாற்றம்? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.
பொதுவாக ஏடிஎம் கார்டு இல்லாமலேயே செல்போனில் உள்ள க்யூ.ஆர் கோடை (QR Code) ஸ்கேன் செய்து பணம் எடுக்கும் வசதியை நாம் அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். இதுவரை இந்தப் பரிவர்த்தனைகள் தனியாகக் கணக்கிடப்பட்டு வந்தன. ஆனால், இனிமேல் ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுப்பதும், யூ.பி.ஐ மூலம் பணம் எடுப்பதும் ஒன்றாகவே கருதப்படும் என HDFC வங்கி அறிவித்துள்ளது. அதாவது, ஒரு மாதத்திற்கு உங்களுக்கு வழங்கப்படும் இலவச ஏடிஎம் பரிவர்த்தனை வரம்பிற்குள் (Monthly Free ATM Limit) இனி இந்த யூ.பி.ஐ பணப்பரிமாற்றங்களும் அடங்கும்.
தற்போதுள்ள விதிகளின்படி, HDFC வங்கி ஏடிஎம்களில் மாதம் 5 முறையும், மற்ற வங்கி ஏடிஎம்களில் சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் 3 முறையும், பிற ஊர்களில் 5 முறையும் இலவசமாகப் பணம் எடுக்க முடியும். இனிமேல் நீங்கள் கார்டு மூலம் எடுத்தாலும் சரி, அல்லது யூ.பி.ஐ மூலம் எடுத்தாலும் சரி, இந்த எண்ணிக்கையைத் தாண்டினால் ஒவ்வொரு முறைக்கும் வழக்கமான ஏடிஎம் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த நடைமுறை வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும் என வங்கி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
வங்கியின் கட்டண அமைப்புகளை முறைப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வங்கித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் காலாண்டில் 12 சதவீத லாப வளர்ச்சியை HDFC வங்கி பதிவு செய்துள்ள நிலையில், இந்த புதிய மாற்றம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இனி தேவையில்லாமல் ஏடிஎம்-மில் பணம் எடுப்பதைத் தவிர்த்து, உங்கள் இலவச வரம்பைத் திட்டமிட்டுப் பயன்படுத்துங்கள்.
