வான்வெளி எப்படி மூடப்படுகிறது? – அதை மீறி விமானம் நுழைந்தால் என்ன நடக்கும்?

ஈரான் – இஸ்ரேல் போர் உச்சத்தை எட்டியிருப்பதால் ஈரான், இஸ்ரேல், லெபனான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், ஓமன், ஈராக், ஜோர்டான், குவைத் மற்றும் கத்தார் ஆகிய 11 நாடுகளின் வான்வெளியை தவிர்க்குமாறு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் விமான போக்குவரத்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

இரு நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் மற்றும் போர் ஆகியவற்றின் போது, நாடுகள் முதலில் தங்கள் வான்வெளியைத் தான் இழுத்து மூடுகின்றன. அந்த வகையில் ஒரு நாட்டின் வான்வெளி எப்படி மூடப்படுகிறது. மூடப்பட்ட வான்வெளிக்குள் அந்நிய விமானம் நுழைந்தால் என்ன நடக்கும்? என்பது குறித்த பார்க்கலாம். நில எல்லைகளை போல வான்வெளியும் ஒரு நாட்டின் முக்கிய பாதுகாப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது.

ஒரு நாடு தனது வான்வெளியை மூடத் தீர்மானிக்கும்போது, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகிறது. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடம், உலகெங்கிலும் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்கள் (ATC) மற்றும் விமானிகளுக்குத் தகவல் பகிரப்படும். அறிவிப்பு வெளியானதும் அந்த வான்வெளி வழியாகச் செல்ல வேண்டிய அனைத்துப் பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள், உடனடியாகத் தங்கள் பாதையை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது பயணத்தை ரத்து செய்ய வேண்டும்.

ஒரு நாட்டின் வான்வெளி மூடப்பட்டிருக்கும்போது அல்லது தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் ஒரு அன்னிய நாட்டு விமானம் அனுமதியின்றி நுழைந்தால், அது மிகப்பெரிய அச்சுறுத்தலாகக் கருதப்படும். இத்தகைய சூழலில், முதலில் சம்பந்தப்பட்ட விமானத்தை ரேடியோ அலைவரிசை மூலம் தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுக்கப்படும். விமானி தவறுதலாக நுழைந்திருந்தால், அவரை உடனடியாகப் பாதையை மாற்றும்படி அறிவுறுத்துவார்கள்.

ஒருவேளை விமானியிடம் இருந்து பதில் வரவில்லை என்றாலோ அல்லது அவர் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் பயணித்தாலோ, அந்த நாட்டின் விமானப்படை உடனடியாகக் களமிறங்கும். போர் விமானங்கள் அந்த விமானத்தைச் சூழ்ந்துகொண்டு, அருகில் உள்ள பாதுகாப்பான விமான நிலையத்தில் தரையிறங்கக் கட்டாயப்படுத்தும். தரையிறங்கிய பின், அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் விமானியிடம் தீவிர விசாரணை நடத்துவார்கள். விதிமீறலின் தீவிரத்தைப் பொறுத்து, அந்த விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது அந்த நாட்டின் மீது சர்வதேசச் சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்கப்படலாம்.

Related News

Latest News