தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியதாவது :
இந்த ஆண்டு கோடை காலம் மார்ச் முதல் வாரத்தில் தொடங்குகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதன்படி, மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடை காலத்தில் 12 வாரங்களில் 4 முதல் 6 வாரங்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவும், வறண்ட வானிலை கொண்டதாகவும் இருக்கும். 2 வாரங்கள் வெப்பசலன இடிமழையும், 3 முதல் 4 வாரங்கள் இயல்பான வெப்பநிலையும் காணப்படும். இதில் வெப்பசலன மழை மார்ச் இறுதி வாரத்தில் தொடங்கும்.
தென்மேற்கு பருவமழை வழக்கமாக தொடங்கக்கூடிய ஜூன் மாதத்தில் இந்த ஆண்டு தொடங்கப்பட்டாலும், அதே மாதத்தில் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதை உணர முடியும். இந்த வெப்பம் செப்டம்பர் இறுதி வரையிலோ அல்லது அக்டோபர் 2-வது வாரம் வரையிலோ நீடிக்க அதிக வாய்ப்புள்ளது.
இது மழைப்பொழிவை குறைவாக தரக்கூடிய ‘எல்நினோ’ என்ற அமைப்பினால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் ஆகும். 2020, 2021, 2022, 2024, 2025 ஆகிய ஆண்டுகள் மழை தரக்கூடிய ‘லாநினோ’ ஆண்டுகளாக இருந்தன. 2027-ம் ஆண்டு உலகளாவிய எல் நினோ ஆண்டாக இருக்கும் என்பதால், உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரிக்கும்.
அதிலும் தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2027) மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும். மொத்தத்தில் 2026-ம் ஆண்டு வெப்பம் அதிகரிக்கும் ஆண்டாகவும், 2027-ம் ஆண்டு வெப்பமான ஆண்டாகவும் காணப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
