Monday, February 23, 2026

வளர்ப்பு நாயால் ஏற்பட்ட விபரீதம்., கை, கால்களை இழந்த பெண்

இந்திய வம்சாவளியை சேர்ந்த 52 வயதான மன்ஜீத் சங்கா, இங்கிலாந்தின் Wolverhampton நகரில் தனது கணவருடன் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம், அவரது கையில் ஒரு சிறிய வெட்டுக்காயம் ஏற்பட்டது. அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அவர் தனது செல்ல நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த நாய் அவரது காயத்தை நக்கியது.

அடுத்த நாளே அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதற்கு மறுநாளே அவர் சுயநினைவை இழந்து கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், கடுமையான Sepsis தொற்று ஏற்பட்டிருப்பது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது.

சுமார் 32 வாரங்கள் மருத்துவமனையில் உயிர் பிழைக்க போராடிய மன்ஜீத், கோமா நிலையில் இருந்தபோது அவரது இதயம் ஆறு முறை துடிப்பதை நிறுத்தியது. உயிரைக் காப்பாற்ற வேறு வழியின்றி, மருத்துவர்கள் அவரது இரண்டு கைகளையும் மற்றும் முழங்கால்களுக்கு கீழே உள்ள இரண்டு கால்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். தற்போது செயற்கை உறுப்புகள் பொருத்திக் கொள்ள நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

செல்லப் பிராணிகளின் உமிழ்நீரில் இருக்கும் சில பாக்டீரியாக்கள், மனிதர்களின் திறந்த காயங்கள் வழியாக உடலுக்குள் நுழைந்தால், இவ்வாறு உயிருக்கு ஆபத்தான தொற்றுகளை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Related News

Latest News