Saturday, February 21, 2026

கடன் வாங்க போறீங்களா? AI மூலம் கிரெடிட் ஸ்கோர்.. புதிய வசதி ரெடி!

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு வங்கிச் சேவைகளை எளிதாகக் கிடைக்கச் செய்வதற்காக மத்திய அரசு புதிய அமைப்பை உருவாக்க திட்டமிட்டு வருகிறது. இந்த முயற்சி குறிப்பாக பெண்கள், கிராமப்புற மக்கள் மற்றும் இதுவரை வங்கிகளில் இருந்து கடன் பெறாதவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

AI அடிப்படையிலான கடன் மதிப்பெண்

பாரம்பரிய கடன் வரலாறு இல்லாதவர்களுக்கும் கடன் வழங்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான புதிய கடன் மதிப்பெண் அமைப்பை கொண்டு வர அரசு பரிசீலித்து வருகிறது. இந்த அமைப்பு நடைமுறைக்கு வந்தால், பொதுமக்கள் கடன் பெறுவது மேலும் எளிதாகும்.

தற்போதைய நடைமுறை

இப்போது வங்கிகள் கடன் வழங்குவதற்கு முன், நபரின் CIBIL மதிப்பெண் மற்றும் கடன் வரலாற்றை சரிபார்க்கின்றன. TransUnion CIBIL போன்ற கடன் தகவல் நிறுவனங்கள், முன்பு பெற்ற கடன்கள், தவணை கட்டணங்கள், நிலுவைகள் போன்ற விவரங்களை பதிவு செய்து வைத்திருக்கும். இதன் அடிப்படையில் வங்கிகள் கடன் வழங்குவது குறித்து முடிவு செய்கின்றன.

கடன் கிடைப்பதில் சிரமம்

இதுவரை கடன் வாங்காதவர்கள் அல்லது கடன் பதிவே இல்லாதவர்கள், ‘புதிய கடன் விண்ணப்பதாரர்கள்’ என கருதப்பட்டு பல நேரங்களில் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. இது முதல் முறையாக கடன் பெற முயற்சிப்போருக்கு பெரிய தடையாக உள்ளது.

AI கடன் மதிப்பெண் என்ன செய்யும்?

புதிய அமைப்பின் கீழ், மாற்று தரவுகள் அடிப்படையில் ஒரு நபரின் கடன் தகுதி மதிப்பிடப்படும். உதாரணமாக, மின்சார மற்றும் தண்ணீர் கட்டணங்களை முறையாக செலுத்தியுள்ளதா, மொபைல் ரீசார்ஜ் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள், வங்கி கணக்கு செயல்பாடு, அரசின் நலத்திட்ட உதவிகள் போன்ற தகவல்கள் ஆய்வு செய்யப்படும். இத்தகவல்களை பகுப்பாய்வு செய்ய AI மற்றும் தரவு பகுப்பாய்வு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

பெண்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு நன்மை

இந்த முயற்சி குறிப்பாக பெண்கள், சுயஉதவிக்குழுக்கள், சிறு தொழில்முனைவோர் மற்றும் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். இவர்களுக்கு நிலையான வருமானம் இருந்தாலும், முறையான கடன் வரலாறு இல்லாததால் வங்கிக் கடன் பெற சிரமம் ஏற்படுகிறது. புதிய அமைப்பு இவர்களை வங்கி முறையுடன் இணைக்க உதவும்.

வங்கி துறை மேம்பாடு

இந்த திட்டம் அமலுக்கு வந்தால், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர் வட்டாரத்தை விரிவுபடுத்த முடியும். மேலும் நிதி உட்புகுத்தலை (Financial Inclusion) ஊக்குவிக்கும். எனினும், தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தொடர்பான தெளிவான விதிமுறைகள் அவசியம் தேவைப்படுகின்றன என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related News

Latest News