Saturday, February 21, 2026

ஊட்டி மலை ரயில் கட்டணம் திடீர் உயர்வு

தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஊட்டி மலை ரெயிலில் சாதாரண கட்டணம் கடைசியாக 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந்தேதி உயர்த்தப்பட்டது. அதன்பிறகு அதிகரிக்கப்படவில்லை. ஆனால் மேட்டுப்பாளையம்-குன்னூர், குன்னூர்-ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான மலை ரெயிலின் இயக்க செலவுகள், பராமரிப்பு செலவு மற்றும் பணியாளர்களின் ஊதியம் ஆகியவை கணிசமாக உயர்ந்து உள்ளன.

இதனை ஈடுகட்டும் வகையிலும், வருவாய் இழப்பை சமாளிக்கும் வகையிலும் நீலகிரி மலை ரெயில் பிரிவில் சாதாரண ரெயில்களின் அடிப்படை கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்படுகிறது. மேலும் இந்த புதிய கட்டண நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி சாதாரண ரெயில்களுக்கான அடிப்படை கட்டணம் மட்டுமே 5 சதவீதம் உயர்த்தப்படும். மற்றபடி முன்பதிவு கட்டணம், கூடுதல் கட்டணங்கள் போன்றவற்றில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் ஏற்கனவே பழைய கட்டணத்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டுகள் செல்லுபடியாகும். அதற்கு கூடுதல் கட்டண வித்தியாசம் வசூலிக்கப்படாது.

இன்று முதல் புதிய கட்டணத்தில் பயணச்சீட்டுகள் வழங்கப்படும். ஊட்டி மலை ரெயில் பிரிவில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் மற்றும் சார்ட்டர் சிறப்பு ரெயில்கள் ஆகியவற்றின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related News

Latest News