எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது புதிய ‘மெஜஸ்டர்’ எஸ்யூவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது டொயோட்டா நிறுவனத்தின் டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடலுக்கு நேரடி போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளது.
பல நாடுகளில் பல்வேறு பெயர்களில் வெளியிடப்பட்ட இந்த மாடல், கடந்த ஜனவரியில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளிக்குப் பின்னர், மூன்று வரிசை இருக்கைகளுடன் கூடிய இந்த பெரிய எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது. இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் உள்ள எம்ஜி கிளாஸ்டர் மாடலை விட உயர்ந்த நிலையில் மெஜஸ்டர் நிலைநிறுத்தப்பட உள்ளது.
மாடல் அறிமுகமானாலும், வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி மே மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முதல் டெஸ்ட் டிரைவ் வசதி கிடைக்கும். தற்போது முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், ரூ. 41,000 செலுத்தி இந்த எஸ்யூவியை முன்பதிவு செய்யலாம்.
சிறப்பம்சங்கள்:
மெஜஸ்டர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 215 ஹார்ஸ்பவர் சக்தியும் 478 நியூட்டன் மீட்டர் டார்கும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. 4 சிலிண்டர் இன்ஜின் அமைப்புடன் வரும் இந்த மாடலில் ரியர் வீல் டிரைவ் மற்றும் நான்கு வீல் டிரைவ் என இரண்டு டிரைவ் தேர்வுகள் உள்ளன.
இது 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என இரண்டு இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. 5,046 மிமீ நீளம், 2,106 மிமீ அகலம், 1,876 மிமீ உயரம் மற்றும் 2,950 மிமீ வீல்பேஸ் கொண்ட பெரிய எஸ்யூவியாக மெஜஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பனோரமிக் சன்ரூஃப், பேடில் ஷிப்டர்கள், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 12 ஸ்பீக்கர்களுடன் ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம், பல நிறங்களில் ஆம்பியன்ட் லைட்டிங் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
காரின் அதிகாரப்பூர்வ விலை ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படும் என எம்ஜி மோட்டார் இந்தியா தெரிவித்துள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக, இதன் விலை ரூ. 40 லட்சம் முதல் ரூ. 45 லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பிடுகையில், எம்ஜி கிளாஸ்டர் மாடலின் விலை தற்போது ரூ. 38.33 லட்சம் முதல் ரூ. 43.16 லட்சம் வரை உள்ளது.
