பாஜக மூத்த தலைவர் மற்றும் தேசியக் குழு உறுப்பினர் ஹெச்.ராஜா (68), நேற்று முன்தினம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்றபோது திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து, அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முதல்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆயிரம் விளக்குப் பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அப்போலோ மருத்துவமனையின் இயக்குநர் (மருத்துவ சேவைகள்) பி.ஜி.அனில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பக்கவாத பாதிப்புக்காக (Stroke) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பேசக்கூடிய வகையில் நலமுடன் உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

