Saturday, January 31, 2026

பெற்றோருக்கு ஊசி போட்டு கொலை செய்த நர்ஸ்., காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரம்

தெலுங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் 23 வயதுடைய ஒரு பெண் நர்ஸாக பணிபுரிந்து வந்துள்ளார். சமூக வலைத்தளம் மூலம் அவருக்கு ஒரு ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நட்பு பின்னர் காதலாக மாறியது. தொடர்ந்து, அந்த நபரை திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கும் அவர் வந்துள்ளார். ஆனால், அந்த இளைஞர் வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால் இந்த விஷயத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்தபோது, அவர்கள் திருமணத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் தனது காதலுக்கு இடையூறாக இருக்கும் பெற்றோரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, தான் பணிபுரியும் மருத்துவமனையிலிருந்து மயக்க மருந்து மற்றும் ஊசிகளை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்த அவர், தனது பெற்றோரிடம் நயமாகப் பேசி, உடல்வலி நிவாரணத்திற்காக ஊசி போடப் போவதாக கூறி, மயக்க ஊசியை செலுத்தியுள்ளார். ஆனால், அதிக அளவு மருந்து செலுத்தப்பட்டதால், பெற்றோர் மயக்க நிலையிலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, தனது சகோதரருக்கு தொலைபேசி செய்து, விவசாயக் கடன் செலுத்த முடியாததால் பெற்றோர் உயிரிழந்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால், இதில் சந்தேகம் ஏற்பட்டதால், சகோதரர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரித்த போது, அந்த பெண் பெற்றோரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News