சென்னை கிண்டியில் ரூ.417.07 கோடி செலவில் அமையவுள்ள குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டிடத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
இந்த மருத்துவமனை உலகளவில் குழந்தைகளுக்காக உருவாக்கப்படுகின்ற பிரத்யேகமான ஒரு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, புற மருத்துவ பயனாளிகள் பிரிவு, குழந்தைகளுக்கான நாளமில்லா சுரப்பி வார்டு, நுரையீரல் சிகிச்சை வார்டு. டயாலிசிஸ் வார்டு, இருதய சிகிச்சை பிரிவு, நரம்பியல் சிகிச்சை பிரிவு, எலும்பியல் சிகிச்சை பிரிவு, இரத்தவியல் பிரிவு, இரைப்பை குடல் அறுவை சிகிச்சை பிரிவு, சிறுநீரகவியல் பிரிவு, ஒட்டுறுப்பு சிகிச்சை பிரிவு, ஆராய்ச்சி ஆய்வகம் என்று பல்வேறு வகைகளிலான சிறப்புமிக்க பிரிவுகள் இம்மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட உள்ளது.
நிர்வாக அலுவலகம், இரத்த வங்கி காப்பகம், மயக்க மருந்தியல் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்குகள், கேத்லேப் ஆய்வகம், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வார்டு, அதிதீவிர சிகிச்சை பிரிவு, எலும்பு மஜ்சை மாற்று அறுவை சிகிச்சை பிரிவு என்று பல்வேறு வகைகளில் அதிநவீன மருத்துவ வசதிகள் இம்மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட உள்ளது.
மொத்தம் 4,63,544 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்ட மருத்துவமனை கட்டப்படவிருக்கிறது. 18 மாத காலத்திற்குள் மருத்துவமனை கட்டிடப் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
