தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் திமுக மகளிர் அணி சார்பில் ‘வெல்லும் தமிழ் பெண்கள் டெல்டா மண்டல மாநாடு’ இன்று மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
புதுமைப்பெண் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் என பலத்திட்டங்களை பெண்களுக்காக நடைமுறைப்படுத்தியுள்ளோம். பெண்கள் கேட்காமலேயே அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி.
இரண்டு நாட்களுக்கு முன் தமிழ்நாடு வந்த மோடி ஏராளமான பொய்களை சொல்லிவிட்டு சென்றுள்ளார். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார். இந்திய மாநிலங்களிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான் என்பதை அடித்துச் சொல்கிறேன்.
பிரதமர் மணிப்பூரை மறந்துவிட்டார். 260 மணிப்பூரில் கொல்லப்பட்டுள்ளனர். உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். மூன்று ஆண்டுகளாக அங்கு இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரை ஆட்சிசெய்தது பாஜகதான். டபுள் என்ஜின் ஏன் மணிப்பூரை காப்பாற்றவில்லை?
பாஜக ஆளும் மணிப்பூர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இருந்துதான் நாட்டுக்குள் போதைப் பொருள் பரவுகிறதென ஆதாரப்பூர்வமாக வெளிவரும் செய்தியை பிரதமர் படிப்பதில்லையா? தோற்ற கூட்டணியை புதுப்பித்துவிட்டு, பிரதமர் பில்டப் கொடுத்திருக்கிறார்.
அதிமுக-பாஜக கூட்டணி ஒரு கட்டாயக் கூட்டணி. மிரட்டலால், உருட்டலால் உருவான பிளாக்மெயில் கூட்டணி. அமித்ஷாவால் திணிக்கப்பட்ட கூட்டணி. டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆளலாம் என பாஜக நினைக்கிறது. ஆனால் அவர்களுக்கான பதிலடியை தமிழ்நாடு மக்கள் தருவார்கள்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
