Monday, January 26, 2026

மது அருந்துவோர், புகை பிடிப்போர் ரத்த தானம் செய்யலாமா? இதை தெரிந்து கொள்ளுங்கள்

ரத்த தானம் செய்வது தொடர்பாக பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. மது அருந்திய பிறகு எவ்வளவு நேரம் கழித்து ரத்த தானம் செய்யலாம், மாதவிடாய் காலத்தில் பெண்கள் ரத்த தானம் செய்யலாமா, வயதானவர்கள் ரத்த தானம் செய்யலாமா போன்ற கேள்விகள் பொதுவாக மனதில் எழுகின்றன. இந்த சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்களை இங்கே காணலாம்.

மருந்து மாத்திரை எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் ரத்த தானம் செய்யலாமா?

மருந்து உட்கொள்வது மட்டுமே ரத்த தானத்திற்கு தடையல்ல. நீங்கள் எந்த நோய்க்காக மருந்து எடுத்துக்கொள்கிறீர்கள், அந்த நோய் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதையே முக்கியமாகக் கருத வேண்டும். ரத்த தானம் செய்யும் முன், உங்கள் உடல்நிலை மற்றும் நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள் குறித்து மருத்துவரிடம் தெரிவித்து ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது.

வருடத்திற்கு ஒருமுறை மட்டும்தான் ரத்த தானம் செய்ய வேண்டுமா?

ரத்த தானம் செய்த பிறகு, உடலில் உள்ள பிளாஸ்மா 24 மணி நேரத்திற்குள் மீண்டும் உருவாகிவிடும். சிவப்பு ரத்த அணுக்கள் 4 முதல் 6 வாரங்களுக்குள் மீள உருவாகும். இருப்பினும், உடல்நலனை கருத்தில் கொண்டு, குறைந்தது 4 மாத இடைவெளியில் ஒருமுறை ரத்த தானம் செய்வது நல்லது.

மது அருந்தியிருந்தால் அல்லது புகைப்பிடித்திருந்தால் எவ்வளவு நேரம் கழித்து ரத்த தானம் செய்யலாம்?

மது அருந்தியிருந்தால் குறைந்தது 24 மணி நேரம் கழித்தே ரத்த தானம் செய்ய வேண்டும். உடலில் இருந்து ஆல்கஹால் முழுமையாக நீங்கிய பிறகு ரத்த தானம் செய்வதே பாதுகாப்பானது. கூடுதலாக ஒரு நாள் இடைவெளி எடுத்துக்கொள்வதும் நல்லது.

புகைப்பிடிப்பவர்கள், ரத்த தானம் செய்வதற்கு முன் குறைந்தது 3 முதல் 4 மணி நேரம் புகைப்பிடிக்காமல் இருக்க வேண்டும். அதேபோல், ரத்த தானம் செய்த பிறகும் குறைந்தது 3 மணி நேரம் புகைப்பிடிக்கக் கூடாது. இதை பின்பற்றாவிட்டால் தலைச்சுற்றல் அல்லது மயக்கம் ஏற்படலாம்.

மாதவிடாய் காலத்தில் ரத்த தானம் செய்தால் பலவீனம் ஏற்படுமா?

மாதவிடாய் காலத்தில் பெண்களின் உடலிலிருந்து சுமார் 30 முதல் 80 மில்லிலிட்டர் வரை ரத்தம் வெளியேறும். ரத்த தானத்தில் சுமார் 350 முதல் 500 மில்லிலிட்டர் வரை ரத்தம் பெறப்படுகிறது. இங்கு முக்கியமானது ஹீமோகுளோபின் அளவு. அது சீராக இருந்தால், மாதவிடாய் காலத்திலும் ரத்த தானம் செய்த பிறகு உடல் விரைவில் மீளக்கூடும்.

யாரெல்லாம் ரத்த தானத்தை தவிர்க்க வேண்டும்?

சமீபத்தில் விபத்து அல்லது கடுமையான காயம் ஏற்பட்டவர்கள், அறுவை சிகிச்சை செய்தவர்கள், ரத்த சோகை அல்லது ரத்த ஓட்டம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் ரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல், மது, சிகரெட் அல்லது வேறு போதைப்பொருட்களை அடிக்கடி பயன்படுத்துபவர்கள், வேறு உடல்நல சிக்கல்கள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே ரத்த தானம் செய்ய வேண்டும்.

ரத்த தானம் செய்த பிறகு கவனிக்க வேண்டியவை

ரத்த தானம் செய்த பிறகு போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பழங்கள், சாறு வகைகள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது உடல் விரைவில் மீள உதவும். இதனால் ரத்த தானத்தால் ஏற்பட்ட சோர்வு குறைந்து, உடல் சக்தி திரும்ப பெற முடியும்.

Related News

Latest News