Sunday, January 25, 2026

கோவில் உண்டியலை திருட முயன்ற நபரை மின்கம்பத்தில் கட்டி வைத்த மக்கள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள வில்லியரேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள ஊர்க்காவலன் சுவாமி கோயிலில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை கிராம மக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

மதுரை–பரமக்குடி நான்கு வழிச்சாலையோரம் அமைந்துள்ள இந்த கோயிலில், ஏற்கனவே மூன்று முறை உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, கோயிலின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் மற்றும் அலாரம் அமைப்புகள் பொருத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் கோயிலின் சுவரை ஏறி குதித்து உண்டியலை உடைக்க முயன்றுள்ளனர். அப்போது அலாரம் ஒலித்ததை தொடர்ந்து, சத்தம் கேட்டு திரண்ட கிராம மக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனர். இதில் ஒருவரை அவர்கள் பிடித்து வைத்தனர். மற்றொருவர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

பிடிபட்ட நபரை கிராம மக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்த பின்னர், திருப்புவனம் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். உண்டியலில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை காணிக்கை பணம் இருந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. பிடிபட்ட நபர் மதுரை ஜெய்ஹிந்த் புரம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திருப்புவனம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

Latest News