நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் மழை பெய்த நிலையில், இன்றும் பல மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கிழக்கு திசை வளிமண்டல அலை நிலவி வருவதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பெய்யும் சூழல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக இன்று செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலூர், தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, நாளையும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மிதமான மழை பரவலாக நீடிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிமூட்டம் குறித்த எந்த எச்சரிக்கையும் இல்லை என்ற நிலையில், மாநிலத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட சுமார் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இன்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
